ஜிஎஸ்டி அண்மைய எதிர்காலத்தில் அமல்படுத்தப்படாது

gstபொருள், சேவை வரியை அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை. ஏனென்றால், அந்த வரியால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வரியின் விகிதாசாரம் பற்றியும் அது இன்னமும்  ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

அதன்மீது ஒரு முடிவுக்கு வருமுன்னர், அரசியல்வாதிகள், தனியார் துறையினர், பொதுமக்கள் ஆகிய தரப்புகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்து வருவதாக இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா கூறினார்.

“அதை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம்.

“அரசாங்கத்தின் கோணத்திலிருந்து மட்டும் பார்க்கவில்லை. மக்களின் நிதிநிலையையும் கருத்தில்கொண்டு ஆராய்கிறோம்”, என சைபர்ஜெயாவில் உலகச் சேமிப்பு வங்கிக் கழகத்தின் ஆசிய/பசிபிக் வட்டார அமைப்பின் 19வது மாநாட்டைத் தொடக்கிவைத்த பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசாங்கத்துக்குக் கூடுதல் வருமானத்தைக் கொண்டுவரும் என்பதுடன் நிறுவன மற்றும் தனியர் வரிகளைக் குறைக்க உதவும் என்பதாலும் அரசாங்கம் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த விரும்புகிறது என அஹ்மட் ஹூஸ்னி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி-இன் விகிதம் பற்றிக் கருத்துரைத்த அவர், “அது அரசாங்கத்துக்கும் தனியார் துறைக்கும் பொதுமக்களுக்கும் பயன்தருவதாக இருத்தல் வேண்டும்”, என்றார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குக் காலவரை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

TAGS: