‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’

selangorassemblyபொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

“சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் இடம் அளித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது”, என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் கூறினார்.

அன்றைய வாக்குறுதி என்னவாயிற்று?

கடந்த 12 ஆவது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்ற பக்கத்தானின் வாக்குறுதியை நினைவு கூர்ந்த ஆறுமுகம், அப்போது மனோகரன் மலையாளம் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அது நிறைவேற்றப்பட இயலாமல் போய் விட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை இப்போது ஏன் நிறைவேற்றவில்லை என்று அவர் வினவினார்.

டிஎபியின் சட்டமன்ற உறுப்பினரான வி.கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளித்திருப்பதை வரவேற்ற ஆறுமுகம், “நாங்கள் கணபதி ராவுக்கு வாழ்த்துகள் கூறுகிறோம். அவரின் நியமனத்தை மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்”, என்றாரவர்.

1 aa exco“கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இதே போன்ற கண்டனத்தை தெரிவித்திருப்போம்” என்பதை வலியுறுத்திய ஆறுமுகம், “எங்களுடையக் குறிக்கோள் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இந்தியர்களுக்கு இரண்டு இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்கள் பக்கத்தான் கூட்டணியின் எந்தக் கட்சியிலிருந்து வர வேண்டும் என்பதல்ல”, என்பதை ஆறுமுகம் உறுதிப்படக் கூறினார்.

பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “அதை வரவேற்கிறோம்” என்றார்.

பக்கத்தான் வெற்றியில் இந்தியர்கள் பங்கு

நஜிப்பின் அமைச்சரவை உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய உறுப்பினர்கள், குறைபாடுகளை அங்கீகரித்து அவற்றைக் கலைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய செயல் திறனை விரைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களிடையே காணப்படும் எல்லையற்ற பிரச்னைகளைக் கவனித்து தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண ஆட்சிக் குழுவில் அதிகமான இந்தியர்கள் இருக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினர், அதாவது 800,000 பேர், இந்தியர்கள். அது மலேசிய இந்திய மக்களின் எண்ணிக்கையில் 40 விழுக்காடாகும் என்பதைச் சுட்டிக் காட்டி, ” சிலாங்கூர் மாநில இந்தியர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு வழி அமைத்தால், அது அனைத்து இந்திய மலேசியர்களுக்கும் செல்திசையாக, வழிகாட்டியாக அமையும் என்பதை ஆறுமுகம் வலியுறுத்தினார்.”

aru_indians“இந்தியர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு அடைவதற்கு சிலாங்கூர் மாநில என்ன செய்யப் போகிறது என்பதன் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.”

“நாம் விரும்பிய மாற்றங்களின் முதல் கட்டம் சிலாங்கூரில் நடந்துள்ளது. பாரிசானிலிருந்து பக்கத்தானுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியில் சிலாங்கூர் இந்தியர்களின் பங்கு மிகப் பெரியது என்றால் அது மிகையாகாது. அடுத்த நமது எதிர்பார்ப்பு: பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம்”, என்று ஆறுமுகம் கூறினார்.

பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம் மீதான நமது எதிர்பார்ப்பு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவு உறுப்பினர்களின் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.

தற்போது, சிலாங்கூர் மாநிலத்தில் 13 பதவிகள் இருக்கின்றன. ஒரு மந்திரி புசார், ஓர் அவைத் தலைவர், ஒரு துணை அவைத் தலைவர் மற்றும் பத்து ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது 8 மலாய்க்காரர்கள், 4 சீனர்கள் மற்றும் ஓர் இந்தியர். இவற்றில் இன்னும் ஒன்றை கூடுதலாக  இந்தியர்களுக்கு கொடுக்க முன்வராதிருப்பது ஏன் என்று ஆறுமுகம் வினவினார்.

இனவாதம்தான் நடைமுறையாக இருக்கிறது

“இக்கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. 2008 ஆண்டிலேயே இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதன் வழி இவர்களால் இந்தியர்களின் மேம்பாட்டை உறுதி செய்ய கொள்கை அளவில் வழி பிறக்க வாய்ப்புள்ளது, இதைக்கூட செய்ய மறுத்தால் எப்படி?”,  என்று ஆறுமுகம் கேட்டார்.

khalid ibrahim, anwar ibrahim di majlis pkr“பக்கத்தானின் நிலைப்பாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மந்திரி புசாரின் நிலைப்பாட்டை, மனப்பாங்கை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை”, என்று வருத்தமுடன் ஆறுமுகம் கூறினார்.

“நாம் இனவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

“சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ஆட்சி செய்கிறது. ஆனால், அந்த 24 மாடி கட்டடத்தில் ஓர் இலாகாவில் கூட மலாய்க்காரர் அல்லாத இயக்குனரைக் காண முடியாது.

“சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இருக்கைகள் கூட இன அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஆனால், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

“சிலாங்கூர் மாநில சுல்தான் மலாய்க்காரர்களுக்கு ஆறு இடம் ஆட்சிக் குழுவில் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததாக மந்திரி புசார் கூறியுள்ளார். இது இனவாதம்.

“இச்சூழ்நிலையில் இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் கூடுதல் இடம் கேட்பதில் தவறு இல்லை”, என்று ஆறுமுகம் வாதிட்டார்.

சுல்தானை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று அவர் மேலும் கூறினார்.

உரிமைக்கான போராட்டம் தொடரும்

“இந்தியர்களைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதாக காணப்படும் பக்கத்தான் தலைவர்களுக்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். 13 ஆவது பொதுத் தேர்தலில் எப்படியாவது சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்திய வாக்காளர்களின் வாக்குகளை அடித்துச் செல்வதற்காக பாரிசான் பொழிந்த பண மழையில் இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மாக இருந்திருக்க முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன்”, என்றார் ஆறுமுகம்.

anwar-and-pakatan-mpsபிகேஆரில் இருக்கும் உயர்மட்ட இந்திய தலைவர்கள் திருவாய் மலர வேண்டும். வாய் திறந்து பேசுங்கள், உரிமைக்காக மலாய்க்காரர்களைப் போல் போராடுங்கள். மௌனியாக இருக்காதீர்கள் என்று ஆறுமுகம் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் மௌனமாக இருக்கப் போவதில்லை. போராடத் தயாராக இருக்கிறோம். முதல் கட்டமாக. பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியர் விவகாரங்கள் குறித்து பேசப்படும்.

“நல்லதோர் வழி காணப்படவில்லை என்றால், உரிமைக்கான போரட்டங்கள்  தொடரும்”, என்று ஆறுமுகம் இறுதியாகக் கூறினார்.

இச் செய்தியாளர் கூட்டத்தில் கா. உதயசூரியன், எல். சேகரன் மற்றும் ஜி. குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

TAGS: