நஜிப்: இசி நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கப்படும்

najibஇப்போது பிரதமர் துறையின் பார்வையில் இயங்கும் இசி என்ற தேர்தல் ஆணையத்தை  நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.

“அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இசி-யின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட மாட்டாது.  அத்துடன் இசி மீதான மக்கள் நம்பிக்கையும் வலுப்படுத்தப்படும்,” என அவர் சொன்னதாக பெர்னாமா  தகவல் வெளியிட்டுள்ளது.

பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றைச் சேர்ந்த எம்பி-க்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றின் கீழ் இசி வைக்கப்படும் என நஜிப் சொன்னார்.

யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா-வின் பிறந்த நாளை ஒட்டி
அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் உரையில் நஜிப் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மாமன்னருடைய பிறந்த நாளை ஒட்டி இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சடங்கின் போது விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இசி மீதான நம்பிக்கையை மேம்படுத்துவது அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கருதப்படுகின்றது.

கடந்த மாதம் நிகழ்ந்த 13வது பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு
பக்காத்தான் ராக்யாட் பெரிய அளவில் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ள வேளையில் நஜிப் அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 51 விழுக்காட்டைப் பெற்றது. ஆனால் மொத்தமுள்ள நாடாளுமன்ற இடங்களில் அதற்கு 40 விழுக்காடு மட்டுமே கிடைத்தது.

அதே வேளையில் மொத்த வாக்குகளில் 47 விழுக்காட்டை மட்டுமே பெற்ற ஆளும் கூட்டணி 60 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை வென்றது. அதற்கு தில்லுமுல்லு நடவடிக்கைகள் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் தொகுதிகளை மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கையை இவ்வாண்டுப் பிற்பகுதியில் இசி மேற்கொள்ளவிருக்கிறது. அப்போது தொகுதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யுமாறு
பக்காத்தான் நெருக்குதல் தொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தில்லு முல்லுகளும் முறையில்லாத ஒதுக்கீடுகளும் பிஎன் -னுக்குச் சாதகத்தை கொடுத்துள்ளதாக அவை எண்ணுகின்றன.

TAGS: