இரட்டைத் தரம் வேண்டாம் என வேதா போலீசாருக்குச் சொல்கிறார்

waythaஅண்மைய சில வாரங்களாக அதிகரித்துள்ள போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீது தனது  அதிகாரிகளை விசாரிப்பதில் இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதை போலீஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்  என மலேசிய ஹிண்ட்ராப் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 11 நாட்களில் நிகழ்ந்த மூன்று தடுப்புக் காவல் மரணங்கள் மீது சுயேச்சையான விசாரணைக்கு  உள்துறை அமைச்சு உடனடியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் அந்த சங்கத் தலைவர் பி  வேதமூர்த்தி வலியுறுத்தினார்.

முன்னாள் பொறியியலாளரான 42 வயது கருணாநிதி போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடந்த
அண்மைய கடைசி நபர் ஆவார். அவர் சனிக்கிழமை தம்பினில் போலீஸ் லாக்கப்பில் மரணமடைந்தார்.

ஏற்கனவே 32 வயது தர்மேந்திரன் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் மே 21ம் தேதி
மரணமடைந்தார். 40 வயதான ரமேஷ் ஜமேஷ் மே 26 பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் இறந்தார்.waytha1

“கொலைச் சம்பவம் (தர்மேந்திரன் மரணம்) மீது விசாரணை நடத்துவதாகப் போலீசார் கூறிக் கொண்டாலும் இது வரை சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் கைது செய்யப்பட்டு விசாரணை முடியும்  வரை தடுத்து வைக்கப்படவும் இல்லை. அதனால் சாதாரணக் குற்றச்சாட்டுக்களுக்குக் கூட  சந்தேகத்துக்குரிய சாதாரணமான நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுகின்றனரோ  என்னும் சந்தேகம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. போலீசார் இரட்டை தரத்தைப்
பின்பற்றவில்லையா ?” என பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட வேதமூர்த்தி ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“போலீசார் அந்த மர்மமான மரணங்களுக்கு மேலோட்டமான காரணங்களைச் சொல்லிக் கொண்டே
போக முடியாது. தங்கள் சொந்த ஆட்கள் மீதான விசாரணையில் அவர்கள் இரட்டைத் தரத்தைப்
பின்பற்றக் கூடாது,” என்றார் அவர்.

இதனிடையே கருணாநிதியின் மரணம் இந்த ஆண்டு மட்டும் போலீஸ் தடுப்புக் காவலில் நிகழ்ந்துள்ள
எட்டாவது மரணம் என அரசு சாரா அமைப்பான சுவாராம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“துரதிர்ஷ்டவசமாக அந்தப் பட்டியல் இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் நீளுவது நிச்சயம்.
சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்கும் முறைகளும் சீரான நடவடிக்கை முறைகளும் அவசர
அவசியமாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். போலீஸ் படை உடனடியாக
முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். போலீஸ்காரர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள்
மீது பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். கைதிகள் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும்,” என
சுவாராம் ஒருங்கிணைப்பாளர் ஆர் தேவராஜன் கூறினார்.

இத்தகைய ‘கடுமையான மனித உரிமை அத்துமீறல்கள்’ முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர்
கோரினார்.

 

TAGS: