கறுப்பு 505 பேரணி : நீதிமன்றத்துக்கு வருமாறு செகுபார்ட்க்கு அழைப்பாணை

chegubardபெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நாளை வருமாறு Solidariti Anak Muda Malaysia  (SAMM) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரினுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முன் கூட்டியே தெரிவிக்காமல் மே 25ம் தேதி பெட்டாலிங் ஜெயா கறுப்பு 505 பேரணியை நடத்தியதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அவர் மீது அந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

அரசாங்க ஒடுக்கு முறையையும் எச்சரிக்கைகளையும் மீறி மே 25ம் தேதி SAMM-ம் இதர பல அரசு சாரா அமைப்புக்களும் பாடாங் தீமோர் திடலில் பேரணியை நடத்தின. நள்ளிரவு வரை நீடித்த அந்தப்  பேரணியில் 70,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

செகுபார்ட் என அழைக்கப்படும் 35 வயது பத்ருல் அந்தக் குற்றத்தை 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் மே 25ம் தேதி மாலை 5 மணிக்குப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

பேரணியை நடத்துவதற்கு 10 நாட்கள் முன்னதாக போலீசாருக்கு அது குறித்து கட்டாயமாக தெரிவிக்க
வேண்டும் என்ற விதியை செகுபார்ட் பின்பற்றவில்லை என நீதிமன்ற அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.