இசி விலக வேண்டும் என கோலாலம்பூர் ‘கறுப்பு 505’ கேட்டுக் கொண்டால் பெர்சே அதனை ஆதரிக்கும்

ambigaகோலாலம்பூரில் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு 505’ பேரணி இசி என்ற தேர்தல்  ஆணையம் விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுமானால் அதனை பெர்சே ஆதரிக்கும் என அதன்  இணைத் தலைவர் எஸ் அம்பிகா கூறியிருக்கிறார்.

ஜுன் 15ல் நிகழும் அந்தப் பேரணியின் நோக்கம் பற்றி பெர்சே-க்கு இன்னும் தெரியவில்லை என  அம்பிகா சொன்னார்.

“எங்களுக்குத் தெரியாது. இசி பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது அவர்கள் ஏற்கனவே கூறியிருப்பதால் அது நோக்கங்களில் ஒன்று என நாங்கள் நம்புகிறோம்,” என குடிநுழைவு தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட்டை இன்று காலை சந்திக்கத் தவறிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

பேரணியை நடத்துவதற்கு அனைவருக்கும் அரசமைப்பு உரிமை உள்ளது என்ற நிலையை பெர்சே
பின்பற்றுவதாக அம்பிகா வலியுறுத்தினார்.

மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் கோலாலம்பூரில் ஜுன் 15ம் தேதி பேரணி ஒன்றை நடத்தும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.

அந்தப் பேரணி அரங்கத்தில் நிகழுமா அல்லது தெரு ஆர்ப்பாட்டமாக இருக்குமா என அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், பேரணிச் செயலகம் விவரங்களை விரைவில் வழங்கும்
எனச் சொன்னார்.

தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் எதிர்ப்புக் கூட்டங்களின் தொடர்ச்சியாக கோலாலம்பூர் பேரணி அமையும்.

‘கறுப்பு 505’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பேரணி மே 8ம் தேதி சிலாங்கூர் கிளானா ஜெயா அரங்கத்தில் முதலில் தொடங்கியது.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி பெர்சே கோலாலம்பூரில் இரண்டு பேரணிகளை நடத்தியுள்ளது.

 

TAGS: