பக்காத்தான் ரக்யாட், ‘கறுப்பு 505’ பேரணித் தொடரில் கோலாலும்பூர் கட்டப் பேரணியை ஜுன் 15-இல், பாடாங் மெர்போக்கில் நடத்த எண்ணியிருப்பதை போலீசுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்துக்கும் இன்று தெரியப்படுத்தும்.
பக்காத்தானின் விருப்பத்தைக் கேட்டால், பிற்பகல் மணி 2-க்கு தொடங்கும் அப்பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதே அதன் முதல் தேர்வாக இருக்கும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
“டாட்டாரானில் பேரணி நடத்துவதே எங்களின் நோக்கமும் விருப்பமும் ஆகும். ஆனால், டாட்டாரானைத் தவிர்க்கும்படி அடிக்கடி போலீஸ் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது”.
இடம் தொடர்பில் திரும்பத் திரும்ப வாதிட்டு கால தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே பாடாங் மெர்போக்கை பக்காத்தான் தேர்வு செய்ததாக அவர் சொன்னார்.
2012 அமைதிப் பேரணிச் சட்டப்படி பேரணி நடப்பதை 10 நாள்களுக்கு முன்னதாகவே அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; பேரணி நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.