சிலாங்கூரில் தண்ணீர் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள தேக்க நிலைக்கு இணக்கமாக தீர்வு காண கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து ‘சாதகமான அறிகுறிகளை’ மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் காண்கிறார்.
தீர்வுகளை விவாதிப்பதற்காக இந்த வார இறுதியில் மாநில அரசாங்கம் எரிசக்தி, பசுமை தொழில்நுட்ப, நீர்வள அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களைத் தொடங்கும் என காலித் சொன்னார்.
‘இணக்கமான தீர்வு காண நாங்கள் எல்லா வழிகளையும் ஆராய்வோம்,” என அவர் மாநில ஆட்சி
மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
சிலாங்கூரை ஆளுவதற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு மக்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு
அதிகாரத்தை வழங்கியுள்ளதால் கூட்டரசு அரசாங்கத்துடன் மாநில நீர் வளங்கள் மீதான தேக்க
நிலையை தீர்க்க முடியும் என காலித் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
காலித் மந்திரி புசாராக இருந்த முதலாவது ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விவகாரம் தலைப்புச்
செய்தியாக பல முறை இடம் பெற்றது. மாநில நீர்வளச் சலுகைகளை எடுத்துக் கொள்ள மாநில
அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை கூட்டரசு அரசாங்கம் தடுத்தது.
அதன் விளைவாக பாகாங்கிலிருந்து சிலாங்கூருக்குத் தண்ணீரைக் கொண்டு வருவது உட்பட லங்காட் 2 என்ற கூட்டரசு திட்டத்தின் கட்டுமானத்தை மாநில அரசாங்கம் தனது ஊராட்சி மன்றங்கள் வழி அங்கீகரிக்க மறுத்தது.
கோம்பாக்கில் உள்ள Klang Gates Quartz Ridgeல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் Quartz சுரங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் காலித் அறிவித்தார்.
Quartz சுரங்க நடவடிக்கைக்கு அனுமதி ஏதும் மாநில அரசாங்கம் வழங்கவில்லை என்றும் Quartz Ridge பகுதியை யுனஸ்கோ பாரம்பரிய பகுதியாக பிரகடனம் செய்ய மாநில அரசாங்கம் எண்ணியிருப்பதால் எதிர்காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சொன்னார்.