தர்மம் தண்டிக்கப்பட்டது!

Uthayaஇந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம்.

2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத கொள்கையின் வழி சமூக இனஅழிப்பு செய்வதாக உதயக்குமார் சாடியிருந்தார்.

உதயாவின் சாடலில் உள்ள உண்மைகளை அரசாங்கம் செவிமடுத்த போதும், அவருக்கு இந்த தண்டணையை வழங்கியிருப்பது அவரின் கூற்றை மூடி மறைக்க முயலுவதோடு, நீதி நியாயம் கோருபவர்களின் பேச்சுரிமைக்குப் பூட்டு போடுவதாக இது அமைந்துள்ளது என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

Aru2001 ஆம் ஆண்டில் நடந்த கம்போங் மேடன் வன்முறையின் போது ஆறு நபர்கள் கொல்லப்பட்டதோடு தொன்னூருக்கும் அதிகமானோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது பற்றிய அரசு விசாரணையை பலமுறை கோரியவர் உதயகுமார். அதோடு அது சார்பாக சுகாக்காம் மீது வழக்கும் தொடுத்தவர். ஆனால், அந்தச் சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

இந்திய இளைஞர்கள் போலிசாரால் சுட்டு கொல்லப்பட்டதையும், சிறையில் மாண்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதியவர்- பேசியவர்- போரடியவர் உதயகுமார்தான் என்கிறார் ஆறுமுகம்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமையைக் கண்டிக்க அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. தேச நிந்தனைச் சட்டம் என்பது ஒரு காட்டு மிராண்டித்தனமான சட்டம். அதை கட்டு கோப்பாக கடைப் பிடிக்க இயலாது என்பதை இந்த வழக்கு நிரூபித்துள்ளது.

ஜனநாயகம் வளர இது போன்ற சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சர்வதிகாரம் வளரவே அவை பயன் படுத்தப்படும் என எச்சரிக்கிறார் ஆறுமுகம்.

TAGS: