உதயாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் அதிர்ச்சி

uthayaஹிண்ட்ராப் அமைப்பைத் தோற்றுவித்த பி உதயகுமாருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை குறித்து  அந்த அமைப்பின் பல முன்னாள் தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

“நாட்டை விட்டு ஒடியவர் அமைச்சராகிறார். ஹிண்டராப் பேரணிக்குப் பின்னணியில் இருந்தவர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தான் உண்மை நிலை,” என ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவராக பணியாற்றியுள்ள எஸ் ஜெயதாஸ் சொன்னார்.

உதயகுமார், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத்
தீர்ப்பளிக்கப்பட்டதற்குச் சில மணி நேரம் முன்னதாக பிரதமர் துறை துணை அமைச்சராக
நியமிக்கப்பட்ட அவரது சகோதரர் பி வேதமூர்த்தி செனட்டராக பதவி உறுதி மொழி எடுத்துக்
கொண்டதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.uthaya1

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹிண்ட்ராப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர் உதயகுமாரே என
இப்போது பிகேஆர் மனித உரிமைகள், சட்ட விவகாரப் பிரிவுக்குத் துணைத் தலைவராக இருக்கும்  ஜெயதாஸ் சொன்னார்.

அந்த நேரத்தில் ஹிண்ட்ராப் தலைவர் என்ற முறையில் பேரணியை வழி நடத்தியிருக்க வேண்டிய  வேதமூர்த்தி, ஜாமீன் மறுக்கப்பட்டு போலீஸ் லாக்கப்பில் இருந்தார். அதே வேளையில் உதயகுமார்  பேரணியை தொடர்ந்து நடத்தினார். அந்தப் பேரணியின் போது கோலாலம்பூர் சாலைகளில் வரலாறு  காணாத அளவுக்கு 30,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

“அந்தப் பேரணியை நடத்திய முக்கிய மனிதர் உதயகுமார். யாரும் அதனை மறுக்க முடியாது,” என
தொடர்பு கொள்ளப்பட்ட போது ஜெயதாஸ் சொன்னார்.

uthaya2இதனிடையே உதயகுமார் வழக்கு குறித்த செய்திகளை தாம் தொடர்ந்து படிக்கா விட்டாலும் அவர்  குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது தமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக இன்னொரு முன்னாள்  ஹிண்ட்ராப் தலைவர் வி கணபதிராவ் சொன்னார்.

அவர் அண்மையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உதயகுமாருடன்  அவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தாம் உதயகுமாருக்காக வருந்துவதாகக் குறிப்பிட்ட கணபதிராவ், நீதிமன்றத்தில் எதிர்வாதம் புரிய
உதயகுமார் மறுத்ததை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

“அவர் ஒரு வழக்குரைஞர். அவர் எதிர்வாதம் செய்யாவிட்டல் தமக்கு என்ன நேரும் என்பது வழக்கின்
அந்தக் கட்டத்தில் அவருக்குத் தெரிந்திருக்கும். என்ன நேரும் என்பது நீதிமன்ற எழுத்தருக்குக் கூடத்
தெரியும்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது கணபதிராவ் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார்

இதனிடையே உதயகுமாருக்கு எதிராக 1948ம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதை
வழக்குரைஞர்களான என் சுரேந்திரனும் எம் குலசேகரனும் கண்டித்துள்ளனர். அது பேச்சுச் சுதந்திரத்தை
மீறுகிறது என அவர்கள் குறிப்பிட்டனர்.

“உதயகுமாரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஜெயிலில் அடைத்ததற்கு அரசாங்கமே பொறுப்பேற்க
வேண்டும்,” என பிகேஆர் உதவித் தலைவரும் பாடாங் சிராய் எம்பி-யுமான சுரேந்திரன் சொன்னார்.

“தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதாக 2012ம் ஆண்டு ஜுலை மாதம் பிரதமர் வாக்குறுதி
அளித்தார். இருந்தும் உதயகுமார் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,” என அவர்
குறிப்பிட்டார்.

தேச நிந்தனைச் சட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். அந்தச் சட்டம் ரத்துச்
செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சுரேந்திரன்
கோரினார்.

2007ம் ஆண்டு ஹிண்டராப் இயக்கம் உச்சக் கட்டத்தில் இருந்த போது அதற்காக சுரேந்திரனும்
குலசேகரனும் குரல் கொடுத்துள்ளனர். அப்போது சுரேந்திரன் மனித உரிமை வழக்குரைஞர் என்ற
முறையிலும் குலசேகரன் ஈப்போ பாராட் எம்பி என்ற முறையிலும் பேசினர்.

2007ம் ஆண்டு நவம்பர் 15க்கும் டிசம்பர் 8க்கும் இடையில் எழுதிய கடிதம் ஒன்றில் தேச நிந்தனைக்
கருத்துக்களை வெளியிட்டதற்காக உதயகுமார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். அந்தக் கடிதம்
Police Watch இணையத் தளத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது.

உதயகுமார் சட்ட ஆலோசகராக இருந்த ஹிண்ட்ராப் அமைப்பு தனது நடவடிக்கைகளை
தெரிவிப்பதற்கு அந்த இணையத் தளத்தை பயன்படுத்தி வந்தது.

2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தை ஹிண்ட்ராப் அப்போதைய பிரிட்டிஷ்
பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு அனுப்பியிருந்தது.

 

TAGS: