தம்பிக்கு அரியாசனம், அண்ணனுக்கு வனவாசமா?

jayakumar-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஜூன் 6, 2013.

தேசநிந்தனை குற்றச்சாட்டில் ஹிண்ட்ராப்   தலைவர் உதயகுமாருக்கு  விதிக்கப்பட்டுள்ள தண்டனை  அதிகபட்சமானதாக பக்காத்தான் கருதுகிறது. மலேசியாவில்  சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், நீதி  வழங்கப்படுவதில்  குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவதையும்  இத்தீர்ப்பு நிருபிப்பதாகவே  உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு  நவம்பர் மாதம்  பிரிட்டிஷ் பிரதமருக்கு  எழுதிய கடிதம் தொடர்பில் தண்டிக்க வேண்டும்  என்றால் பலர்  அது குறித்து விசாரணை  செய்யப்பட வேண்டும். குறிப்பாக,  அவரின்  சகோதரர்   வேதமூர்த்தி மீது  எந்த விசாரணையும் செய்யாத நிலையில்  துணை அமைச்சர் பதவி வழங்கிக்  கௌரவிக்கப்பட்டிருக்கையில் இவருக்குச் சிறை தண்டனை வழங்கியிருப்பது,  இந்நாட்டின் நீதி  பரிபாலனம் அம்னோவின் கைப்பாவையாகச் செயல்படுவதை  மக்களுக்கு  உணர்த்துகிறது.

இதே சட்டத்தின்  கீழ் தண்டிக்கப்பட வேண்டிய பலர்  இருக்கின்றர்.  ஆனால்  அவர்களுக்குப்  பிரதமர் பதவி முதல் நாடாளுமன்ற, சட்டமன்று உறுப்பினர் பதவிகளும், பல கௌரவ  விருதுகளும்  வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர்  டாக்டர் மகாதீர் என்பது நாடு அறியும்.

அதே குற்றத்தில்  தண்டிக்கப்பட வேண்டிய  இப்ராஹிம்  அலி  மற்றும் சூல்கிப்ளி நோர்டினுக்கு  நாடாளுமன்ற  தொகுதிகளை வழங்கி  அவர்களைக்  கௌரவப் படுத்தியுள்ள  பாரிசான் அரசு,  இவ்வளவு  காலம்  கடத்தி பொதுத்தேர்தல் முடிந்தபின் ஹிண்ட்ராப்  உதயகுமாருக்கு  வழங்கியுள்ள தண்டனை கடுமையான விமர்சனத்துக்குரிய செயலாகும்.

சட்டத்துறை தலைவர் நினைத்தால்  ஹிண்ட்ராப்  உதயகுமாருக்கு  விதிக்கப்பட்டுள்ள தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம்.  அது செய்யப்படவேண்டும்.

TAGS: