டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்

gooiசீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் ‘நேர்மையற்ற தாக்குதலை’ தொடுத்துள்ள டாக்டர் மகாதீர்  முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர்.

அந்த முன்னாள் பிரதமருடைய “முற்றிலும் நியாயமற்ற நேர்மையற்ற” வலைப்பதிவுக்கு எதிராகவும் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூய் சொன்னார். அந்த வலைப்பதிவை ‘நல்ல சிந்தனை கொண்ட எந்த மனிதரும் நம்ப மாட்டார்’ என்றும் அவர் கூறினார்.

“மலாய்க்காரர்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒரங்கட்டுவதற்கு சீனர்கள் முயலுவதாக மகாதீர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க அபத்தமானது, பொறுப்பற்றது, எல்லா இனங்களும் பகிர்ந்து கொண்டுள்ள தேசிய ஒற்றுமையையும் மருட்டுகின்றது.”

gooi1“மலாய்க்காரரகளுக்கும் சீனர்களுக்கும் இடையில் வெறுப்புணர்வையும் பகைமை உணர்வையும் துண்டி  விடுவதற்காக தீவிர இனவாதி ஒருவர் மட்டுமே அத்தகைய கருத்துக்களைச் சொல்ல முடியும்,” என கூய்  இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே பொதுத்  தேர்தலில் “சீன இனவாதம்” இருந்ததற்கு தக்க சான்றாகும் என டாக்டர் மகாதிர் அந்த வலைப்பதிவு  ஒன்றில் கூறியிருந்தார்.

பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்” என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவை”என்றும் அவர் எழுதியிருந்தார்.

இதன் விளைவாக நாட்டில் இனங்கள் தனித்தனியே பிரிந்து கிடக்கும் நிலை முன்னிலும் மோசமாகும்  என்பதுடன் மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மேலும் ஓரங்கட்டப்படும்  நிலை உருவாகும் என்றும் அவர் சொன்னார்.

தாம் விடுத்துள்ள அறிக்கைகளுக்கு மகாதீரை பொறுப்பேற்குமாறு செய்யப்பட வேண்டும்  என்றும் கூறிய கூய், தேச நிந்தனைக்காக மகாதீரை உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்துறைத்  தலைவரைக் கேட்டுக் கொண்டார்.

ஜுன் 15ம் தேதி கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கறுப்பு 505’ பேரணியில் கலந்து கொண்டு அதற்கு வருகின்றவர்கள் பெரும்பாலும் சீனர்களா அல்லது பல இனங்களைச் சார்ந்தவர்களா என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுமாறும் கூய் மகாதீருக்குச் சவால் விடுத்தார்.

TAGS: