கர்பால் குற்றச்சாட்டு: நீதிபதி மாலிக் வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக் கொண்டார்

சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடி விட்ட ஒரு மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரு விசாரணை மன்றம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தாக்கல் செய்த கர்பால் சிங் இன்று அந்த நீதிபதியை நேருக்கு நேர் சந்தித்தார்.

நீதிபதி அப்துல் மாலிக் இஷாக் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தின் முன் தோன்றிய கர்பாலுக்கு இது ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையாகும்.

ஒரு போதைப்பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு மற்றும் அரசின் எதிர்-முறையீடு வழக்கை செவிமடுப்பதிலிருந்து நீதிபதி அப்துல் மாலிக் (வலம்) விலகிக்கொள்ள வேண்டும் என்று கர்பால் இன்று கேட்டுக்கொண்டார்.

நீதிபரிபாலனத்தில் நிகழ்ந்த தவறான நடத்தைக்காக அரசமைப்புச் சட்ட விதி 127 இன் கீழ் சிங்கப்பூர் நீதிபதி வழங்கிய தீர்ப்பை திருடியதாக கூறப்படுவதை விசாரிக்க ஒரு விசாரணை மன்றம் அமைக்கைக் கோரும் மனு ஒன்றை தாம் தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை செவிமடுப்பதிலிருந்து நீதிபதி மாலிக் விலகிக்கொள்ள வேண்டும் என்று கர்பால் நீதிபதியிடம் கூறினார்.

இதர இரண்டு நீதிபதிகளான அஸ்ஹார் மா’ஆ மற்றும் மோதாருடின் பாக்கி ஆகியோருடன் இந்த ஆயத்திற்கு தலைமை ஏற்குமாறு மேல்முறையீட்டு தலைமை நீதிபதி முகமட் ராவ்ஸ் ஷரிப் தம்மை பணித்திருப்பதாக நீதிபதி மாலிக் கூறினார்.

“ஒரு நீதிபதியாக நீதியை நிலைநாட்டுவதற்கு நான் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன்”, என்று நீதிபதி அப்துல் மாலிக் வலியுறுத்திக் கூறினார்.

நீதி ஆயத்தின் மீது அரசு தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளது என்று டிபிபி வான் லி சா கூறினார்.

இருப்பினும், நீதிபதி அப்துல் மாலிக் இந்த வழக்கை தொடர்ந்து செவிமடுத்தால், நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழும் என்று கர்பால் அவர்களுக்கு நினைவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்த நீதிபதி “இந்த வழக்கு நவம்பர் 14 ஆம் தேதி நான் பங்குபெறாத இன்னொரு ஆயத்தின் முன் செவிமடுக்கப்படும்”, என்று மிக அமைதியாகக் கூறினார்.

கர்பால் இந்த வழக்கில் எம். குலசேகரனை பிரதிநிதித்தார். ஒரு தொழிலாளியான குலசேகரன், 34, ஷா அலாம் உயர்நீதிமன்றத்தில் 12,654.14 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது 908 கிராம் போதைப்பொருளை அதே இடத்தில் வைத்திருந்தார் என்று அக்குற்றச்சாட்டை நீதிபதி குறைத்தார். குலசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 12 ஆண்டு சிறைதண்டனையும் 10 கசையடிகளும் விதிக்கப்பட்டன.

இத்தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டை கர்பால் நடத்துகிறார். அதே வேளையில், மரண தண்டனைக்கு வகை செய்யும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று அரசு தரப்பு எதிர் மேல்முறையீடு செய்துள்ளது.

“மகிழ்ச்சிகரமான ஆச்சரியம்”

நீதிமன்றத்திற்கு வெளியில், இவ்வழக்கிலுள்ள இடரை தாம் அலட்சியப்படுத்த முடியாது. ஆகவே நீதிபதி இந்த வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கோரியதாக கர்பால் கூறினார்.

“நீதிபதி அப்துல் மாலிக் இதனை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சிகரமான ஆச்சரியத்தை அளித்தது”, என்றாரவர்.

TAGS: