குழந்தைகள் மதம் மாற்ற சட்டங்கள் மீதான வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள்

kulaபெற்றோர்கள் பிரிந்த பின்னர் பிள்ளைகளை தங்கள் பராமரிப்பில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு இன்னொரு சமயத்துக்கு மதம் மாற்றம் செய்வதை தடுக்கும்  வகையில் சட்டத் திருத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு  அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை அந்த வாக்குறுதியை வழங்கியது.  ஆனால் சம்பந்தப்பட்ட சட்டங்களைத் திருத்தம் செய்ய இது வரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என டிஏபி தேசிய உதவித் தலைவரும்  ஈப்போ பாராட் எம்பி-யுமான எம் குலசேகரன் கூறினார்.

“பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறுவதற்குப் பின்னர் முடிவு  செய்தால் பிள்ளைகள் பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்ட நேரத்தில்  பின்பற்றிய மதத்திலேயே இருக்க வேண்டும் என 2009 ஏப்ரல் மாதம்  அமைச்சரவை முடிவு செய்தது.”

“பிள்ளைகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மதம் மாறுவதற்கு முன்னர்  திருமணத்தில் எஞ்சியுள்ள எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும்.”

“ஆனால் இது நாள் வரையில் 1984 இஸ்லாமியக் குடும்ப (கூட்டரசுப் பிரதேசம்)  சட்டம், 1993 இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டம், சட்ட  சீர்திருத்தச் சட்டம் (திருமணம், மண முறிவு) ஆகிய மூன்று சட்டங்களுக்கும்  திருத்தங்களைச் சமர்பிக்க அரசாங்கம் தவறியுள்ளது,” என குலசேகரன் இன்று  விடுத்த அறிக்கையில் கூறினார்.

அந்தச் சட்டங்கள் எப்போது திருத்தப்படும் என்பது மீதும் அரசாங்கம் எந்த  அறிகுறியையும் காட்டவில்லை என மதங்களுக்கு இடையிலான குழந்தை  பராமரிப்பு வழக்குகளில் ஆஜராகியுள்ள வழக்குரைஞருமான அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலானில் பிரிந்து சென்ற தமது கணவர் தமது ஒப்புதல் இல்லாமல்  தங்களது இரண்டு சிறு வயதுப் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை  கண்டு பிடித்துள்ள சம்பவம் பற்றி குலசேகரன் கருத்துரைத்தார்.

அவரது கணவர் இஸ்லாத்துக்கு மாறிய பின்னர் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.  அந்தத் தம்பதிகள் பிரிந்து வாழ்ந்தாலும் சிவில் சட்டப்படி இன்னும் திருமணம்  செய்து கொண்டவர்களே என அந்தச் செய்தியை வெளியிட்ட தி ஸ்டார் நாளேடு  கூறியது.

நெகிரி செம்பிலானில் தங்கள் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்வதற்கு  இஸ்லாத்தை தழுவிய பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் இருந்தால் போதும்  என அந்த மாநில இஸ்லாமிய விவகாரத் துறை கூறியுள்ளதாகவும் அந்த ஏடு  செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: