ஜூன் 22-இல், ‘505 கறுப்புப் பேரணியை’பாடாங் மெர்போக்கில் நடத்த அனுமதி கேட்டு பக்காத்தான் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்தது.
மூன்று காரணங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டதாக கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
முதலாவதாக, ஜூன் 23-இல், மலேசிய ஒலிம்பிக் மன்றம் அந்தத் திடலில் ஒரு நிகழ்வை நடத்துகிறது.
கடந்த ஆண்டே திடலுக்கும் முன்பதிவு செய்து விட்ட அவர்கள் அந்நிகழ்வை நடத்துவதற்குத் தேவையான தளவாடங்களையும் முதல் நாளே அங்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
இரண்டாவதாக, அத்திடல் கோலாலும்பூரின் முக்கியமான சாலைகளுக்கு அருகில் இருப்பதால் அங்கு பேரணி நடத்தினால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
மூன்றாவதாக, ஜாலான் பார்லிமென் நெடுகிலும் உள்ள இயற்கை வனப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு டிபிகேஎல்லுக்கு உண்டு என அஹமட் பீசல் கூறினார்.
பேரணியை விளையாட்டரங்குகள் போன்றவற்றில் நடத்துவது நல்லது என்றாரவர்.
“கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் பாடாங் மெர்போக்கில் பேரணி நடத்த அனுமதிக்காது. ஆனால், வேறு பொருத்தமான இடங்களை அவர்கள் தேடினால் அவர்களின் முயற்சிகளில் உதவும்”.