“எஸாம் முகமட் நூர் மற்றும் அவரது கும்பலுக்கு, அம்னோ கூட அரசர் அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்வது மனித இயல்பு.”
அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு
ஜனநாயகம்53: நாம் கற்காலத்தில் வாழவில்லை. சுல்தானுடைய அறிக்கையை முஸ்லிம் அல்லாத சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகும். வழக்குப் போடுவதற்கு ஆதாரம் இல்லை என்னும் வேளையில் மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக அவர் சொல்லியிருக்கிறார்.
அந்த “அறிகுறிகள்” யாவை என இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களை நாம் கேட்க முடியுமா ? சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கு அவமானம் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது என பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
அரசர் அமைப்பு முறை மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் கடவுள் அல்ல. அவர்கள் தவறு செய்வதாகத் தெரிந்தால் அவர்களையும் கேள்வி கேட்கலாம்.
சில விஷயங்களுக்காக அரச குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப் போடப்பட்டதை நாம் மறக்கக் கூடாது. பலர் மீது வழக்குப் போடப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.
ஆகவே எஸாம் முகமட் நூர் மற்றும் அவரது கும்பலுக்கு, அம்னோ கூட அரசர் அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்வது மனித இயல்பு.
ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அரசர்கள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என மலேசியாவில் எந்தச் சட்டம் கூறுகிறது ? ஆட்சியாளர்கள் மீது கூட சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்படலாம். நாட்டுத் துரோகம் மட்டுமே குற்றமாகும். ஆட்சியாளர்களுடைய அறிக்கைகள், கருத்துக்கள், நடத்தை குறித்து விமர்சனம் செய்வது தேசத் துரோகம் அல்ல. ஆனால் அந்த விமர்சனம் நியாயமானதாகவும் மரியாதையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
பேராசிரியர் அஜிஸ் பேரியின் கருத்துக்கள் நியாயமானவை. பொருள் பொதிந்தவை. மரியாதையானவை.
அம்னோ ஆதரவாளர்கள் மட்டுமே ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வது அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட மருட்டல் எனக் கருதுகிறது. காரணம் அம்னோ தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக ஆட்சியாளர்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அத்துமீறியும் நடந்து கொண்டுள்ளது.
1980ம் ஆண்டுகளிலும் 1990ம் ஆண்டுகளிலும் உருவான அரசியலமைப்பு நெருக்கடியின் போது ஆட்சியாளர்களை அவமானப்படுத்தியதுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த சட்ட விதி விலக்கை அகற்றி, சலுகைகளை கட்டுப்படுத்தியது எந்தக் கட்சி ? அது அம்னோவே தவிர சாதாரண மக்கள் அல்ல.
போர்க் கினாவ்லு: மன்னர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள். கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அவர்கள் விவேகமானவர்கள். அவர்கள் தவறே செய்ய மாட்டார்கள். விவேகமற்ற முறையில் எதனையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் நினைத்தால் தவிர அவர்களுக்கு மரியாதைக் குறைவு ஏற்படாது. ஆட்சியாளர்களுடைய விருப்பங்களை பின்பற்றுவதைத் தவிர குடிமக்களுக்கு வேறு வழி இல்லை. ஆட்சியாளர்கள் வாழ்க.
சுதந்திரச் சிந்தனையாளன்: உத்துசான், யாரும் குற்றம் சாட்டப்பட மாட்டார்கள் என சுல்தான் தெளிவாக அறிவித்த பின்னரும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என இஸ்மா அமைப்பைச் சேர்ந்த அப்துல்லா ஸாய்க் கேட்டுக் கொண்டிருப்பது பற்றி எதுவும் சொல்லவில்லையே ? அல்லது தான் விரும்பும் விஷயத்தை மட்டுமே கேட்பதை அது நாடுகிறதா ?
சுவாத்: ஒரு நாட்டின் தலைவர் அவர் எந்த தகுதியில் இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவு செய்தால் அது ஆழமான ஆய்வுக்கு உட்பட்டதே. அவரது முடிவு நியாயமானதாக இல்லை என்றால் அவர் சொல்வதை நாம் சகித்துக் கொள்கிறோம், ஏற்றுக் கொள்கிறோம் என்பது தான் பொருள். அந்த நிலையில் நாம் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. மாறாக சகித்துக் கொள்கிறோம்.
அதிகார பீடத்தில் அமர்ந்துள்ளதால் ஒருவர் விவேகமானவராகி விட முடியாது. அவர்கள் ஐக்கியமான குழுவை, ஐக்கியமான நாட்டை, உண்மைகள், அறிவாற்றல் அடிப்படையிலான மனித மூலதனத்தை ஒரே மலேசியாவை விரும்பினால் ஆட்சியாளர்கள் விவேகத்துடனும் அறிவாற்றலுடனும் வழி நடத்த வேண்டும். அவர்கள் சொல்வதை நாம் கேட்பதுடன் ஆய்வு செய்வதையும் அறிந்து அவர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
உத்துசான் மலேசியாவுக்கும் தலைமைப் பொறுப்பேற்றை ஏற்று விவேகமாகவும் அறிவாற்றலுடன் செயல்படக் கூடிய தலைவர் தேவைப்படுகிறார்.