தகுந்த காரணமின்றி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் சென்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளத் தவறும் எம்பிகள் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பர்.
“கூட்டரசு அரசமைப்பின் பகுதி 59(1)-இன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் ஆறு மாதங்களுக்குள் பதவி உறுதிமொழி எடுக்கத்தவறினால் எம்பி தகுதியை இழப்பார்”, என மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் பண்டிகார் அமின் மூலியா கூறினார்.
நிலை ஆணை 1 இதை வலியுறுத்துகிறது என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என்றும் அதன் பின்னர் எம்பிகள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர் என்றும் தெரிவித்தார்.
சில தரப்பினர் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் நாடாளுமன்றத்தின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கைப் புறக்கணித்தால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக பண்டிகார் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விளக்கக் கூட்டமொன்றைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் எம்பிகளாக செயல்பட முடியாது என்றவர் விளக்கினார்.
“நாடாளுமன்றத்துக்கே அறிமுகமற்றவர்களாக ஆகிவிடுவார்கள். நாடாளுமன்றத்தில் அமர முடியாது. அவர்களின் கடமைகளைச் செய்ய இயலாது.
“மக்களவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும்தான் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத நிலையிலும் அவர்கள் எம்பிக்குரிய உரிமையுடன் செயல்பட முடியும்”.
பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கை வேண்டுமென்றே புறக்கணிப்பது நாடாளுமன்றத்தையும் மலேசிய நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிப்பதாகும் என பண்டிகார் கூறினார்.
“அது நாடாளுமன்றத்தையும், மக்களவைத் தலைவரையும் நாட்டையும் பேரரசரையும் அவமதிப்பதாகும்”, என்றார்.
ஒழுங்கை மீறும் எம்பிகளுக்கு எதிராக நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த அவர், கலந்துகொள்ள முடியாமல் போனதற்குத் தகுந்த காரணங்கள் இருந்தால் இன்னொரு நாளில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.
“ஆனால்,பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணித்துவிட்டு பின்னர் அதற்கு வேறு ஒரு நாள் கேட்டு எனக்கு எழுதினால் நானும் என் உதவியாளர்களும்கூட அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வதைப் புறக்கணிக்கலாம்தானே”, என்றவர் கிண்டலடித்தார்.
“விருப்பம்போல் நடந்துகொள்ள விட மாட்டோம். எல்லாருமே புறக்கணித்தால், அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று நானும் புறக்கணித்தால் முடிவில் என்னவாகும்?”, என்றவர் வினவினார்.
13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடி நிகழ்ந்திருப்பதாக எதிர்ப்புத் தெரிவிக்கும் சுவாரா ரக்யாட் 505- பல என்ஜிஓ-களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு- பக்காத்தான் எம்பிகள் பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
பாஸும் டிஏபியும் அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டன. பிகேஆர் கவனத்தில் கொள்வதாகக் கூறியது. ஆனால், இதுவரை எதுவும் சொல்லவில்லை.
இவனுங்க என்ன ரொம்ப நேர்மையானவனுங்க்களா ,திருட்டு வழியில் வென்றவர்கள்