போலீஸ் மீதான புகார்கள் : ஐபிசிஎம்சி-க்காக தெரு ஆர்ப்பாட்டமா?

1 ngoபோலீஸ் மீதான புகார்களையும் அவர்களின் தவறான நடத்தைகளையும் விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக  Stop State Violence இயக்கம் தெரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடும்.

இவ்வாண்டில் மட்டும் போலீஸ் காவலில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து அது பற்றி ஆலோசிக்கப்படுபவதாக 30 என்ஜிஓ-களின் கூட்டமைப்பான Stop State Violence இயக்கம் கூறியது.

19 சட்ட அமலாக்க அமைப்புகளைக் கண்காணிக்க ஈராண்டுகளுக்குமுன் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒழுங்கு ஆணையம் (EAIC) ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அது சரியாக செயல்படவில்லை என அவ்வியக்கம் கருதுகிறது.

போலீஸ் காவலில் ஒன்பது பேர் இறந்து போனதை அடுத்து மக்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெனாகானிதா நிறுவனரும் இயக்குனருமான ஐரின் பெர்னாண்டஸ்  கூறினார்.

“ஐபிசிஎம்சி-க்காக கூடுதல் நெருக்குதல் கொடுக்க அதுதான் (தெரு ஆர்ப்பாட்டம்) வழி என்றால் அதைக் கண்டிப்பாக செய்வோம்.

“மக்களின் குரலைக் கேட்க வைப்பதற்கு அது ஒன்றுதான் வழி என்றால் தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்”, என ஐரின்(இடம்)  தெரிவித்தார்.

Stop State Violence இயக்கம் என்பது சர்ச்சைக்குரிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) ஒழிப்புக்கான இயக்கம் போன்றது என சுவாராம் ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன் கூறினார்.

“ஐஎஸ்ஏ ஒழிப்புக்காக நடத்தப்பட்ட போராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அது நீண்ட, கசப்பான போராட்டம். 2009-இல் அதை ஒழிப்பதற்காக மிகப் பெரிய தெரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“ஐபிசிஎம்சி-க்காகவும், தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட அதேபோன்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியிருக்கலாம்”, என தேவராஜன் கூறினார்.

ஐபிசிஎம்சி-க்காக கடந்த பத்தாண்டுகளாக பல சமூக அமைப்புகள் குரல் கொடுத்து வந்துள்ளன. அவற்றின் கோரிக்கைகளுக்கு நீர்த்துப்போன ஈஏஐசி தான் கிடைத்தது. ஐபிசிஎம்சி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஈஏஐசி-க்கு அது இல்லை.