பிகேஆர்: பதவி பிரமாணம் செய்துவைப்பதை மறுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு இல்லை

1 aminமக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிக்கும் எம்பிகளைத் தாமும் புறக்கணிக்கப்போவதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டதற்கு பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சுரேந்திரன், நிலை ஆணை 5(10)ஐ பண்டிகாருக்கு நினைவுறுத்தினார். அது மக்களவை செயலாளர் எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

எனவே, எம்பி-களைப் புறக்கணிக்கப் போவதாக பண்டிகார் விடுத்த  ‘மிரட்டல்’ “நிலை ஆணையையும் அரசமைப்பையும் மீறும் செயலாகும்” என்றாரவர்.

1 amin 4 suren“நிலை ஆணை 5(2)  ‘முன்னர் பதவி உறுதிமொழி எடுக்காத ஓர் உறுப்பினர் மக்களவைச் செயலாளரை அணுகினால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்’ என்பதைத் தெளிவாகக் கூறுகிறது”, என சுரேந்திரன் (வலம்) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

“நிலை ஆணைப்படி மக்களவைச் செயலாளர், பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டிராத எம்பிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது கட்டாயமாகும். எனவே, மக்களவைத் தலைவரோ, பின்னோ பக்காத்தான் எம்பிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை மறுக்க இயலாது”.

இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பண்டிகார், எம்பி-கள் ஜூன் 24-இல் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கை வேண்டுமென்றே புறக்கணித்தால் பின்னர்  தாமும் தம் உதவியாளர்களும்கூட அந்த எம்பிகளைப் புறக்கணிக்க முடியும் என்றார்.

தகுந்த காரணமின்றி, பதவி உறுதிமொழிச் சடங்குக்கு வரத் தவறும் எம்பிகள் ஆறு மாதங்கள்வரை பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படாமல் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இயல்பாகவே இழப்பர் என்று அரசமைப்பு கூறுவதைச் சுட்டிக் காண்பித்து பண்டிகார் எச்சரித்திருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிப்பது நாடாளுமன்றத்தை “அவமதிப்பதாகும்”, என்றாரவர்.

பண்டிகாரின் மக்களவைத் தலைவர் பதவியும் முடிவுக்கு வருகிறது. ஆனால், புதிய நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும்போது அவர் மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

 

 

 

TAGS: