பெற்றோர்களில் ஒருவர் மட்டும் பிள்ளைகளை மதம் மாற்றுவது ‘தார்மீக ரீதியாக தவறானது’

mosqueஒரு குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவர்  மட்டும் ஒப்புக் கொள்வது போதுமானது என நெகிரி செம்பிலான் இஸ்லாமிய  விவகாரத் துறை இயக்குநர் ஜொஹானி ஹசான் சொல்லியிருப்பது ‘தார்மீக ரீதியாக  தவறானது’ என மலேசிய குருத்துவார் மன்றம் வருணித்துள்ளது.

“அது அரசமைப்புக்கு முரணானது மட்டுமல்ல தார்மீக ரீதியிலும் தவறானது,” என  அதன் தலைவர் ஜாஹிர் சிங் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

தங்கள் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில்  ஒருவருடைய இணக்கம் மட்டுமே தேவை என கூட்டரசு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளதை அங்கீகரித்த  அவர், நீதிமன்றம் தனது முடிவில் தவறு  செய்து விட்டதாகச் சொன்னார்.

“ஜொஹானி தமது மனச்சாட்சியைக் கேட்க வேண்டும். அவருடைய இளம்  பிள்ளைகள் அவருடைய ஒப்புதல் இல்லாமல் மதம் மாற்றம் செய்யப்பட்டிருந்தால்  அவருக்கு எப்படி இருக்கும் ?”

“உங்களுக்கு ஒரு நீதியும் மற்றவர்களுக்கு ஒரு நீதியையும் நீங்கள் அமலாக்குவதற்கு நீதியும் நியாயமும் உங்களை அனுமதிக்காது.”

“அது தான் நடைமுறை என்றால் பிள்ளைகளை பராமரிக்கும் உரிமையைப்  பெறுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை மதம் மாற்றிக் கொண்டே  இருப்பார்கள்,” என்றார் ஜாஹிர்.

“கூட்டரசு அரசமைப்பு உச்சச் சட்டம் என்பதால் பெற்றோர்களில் ஒருவர் பிள்ளைகளை மதம் மாற்ற முடியும் என நீங்கள் விளக்கமளித்தால் அன்றாடம்  மதம் மாற்றங்களும் மீண்டும் மதம் மாற்றங்களும் நிகழ்வதை யாரும் தடுக்க  முடியாது. அது அபத்தமானதாக இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

பெற்றோர்களில் ஒருவர் மற்றவருடைய இணக்கம் இல்லாமல் பிள்ளைகளை மதம்  மாற்றம் செய்வதைத் தடுப்பதற்கு 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவை  நிலை நிறுத்துமாறு ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் விடுத்த  வேண்டுகோளை ஜாஹிர் வரவேற்றார்.

ஒரு குழந்தை தான் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்ளும்  சுமையை அது மேஜராவதற்கு முன்னர் வழங்கக் கூடாது என்பதை மலேசிய  இஸ்லாமிய புரிந்துணர்வுக் கழகம் கூட ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர்  சொன்னார்.