சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பிகேஆர் கட்சியின் அரசியல் தொடர்பு அதிகாரி என்ற ரீதியில் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனின் கடமைகள் என்ன என்பது இன்னும் சிலாங்கூர் பிகேஆர்-ருக்கு தெரிவிக்கப்படவில்லை.
“அவருடைய பணிகள் பற்றிய விவரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி இங்கு இல்லை. அவர் திரும்பியதும் நாங்கள் அந்தப் பதவி பற்றிய விவரங்களை அறிய முயலுவோம்,” என மாநில பிகேஆர் துணைத் தலைவர் சுராய்டி கமாருதின் இன்று கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
சைபுடின் நியமனம் தொடர்பில் மாநில கட்சித் தலைமைத்துவடன் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார். அந்த விவகாரம் மீது தமக்கு எந்தத் தகவலும் இல்லை என்பதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் டிஏபி-யின் தெரெசா கோக் -கும் பாஸ் கட்சியின் சுல்கெப்லி அகமட்டும் கட்சித் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மூவரும் தங்களது கட்சியின் மாநிலத் தலைமைத்துவத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தொடர்புகளை வலுப்படுத்த உதவுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.