ஜாஹிட் வாக்குகளை வாங்கினார்; நிறைய செலவிட்டார்: பிகேஆர்

1 elec zahidஅம்னோவின் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட தெர்தல் செலவினத் தொகையான ரிம200,,000-த்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக, ரிம2 மில்லியனுக்கும் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது.

அது, ஜாஹிட் மே 5 பொதுத் தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாகவும் அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிகமாக செலவு செய்தார் என்றும்  இரண்டு தேர்தல் முறையீட்டு மனுக்களைச் செய்துகொண்டுள்ளது.

இரண்டு மனுக்களுமே ஜாஹிட்டே அவரது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியைச் சுட்டிக் காட்டுகின்றன. அதில் அவர் தம் தொகுதியில் தேர்தல் பணியாற்ற 24,000 பாகான் டத்தோ பிஎன் ஆதரவாளர்களைத் திரட்டி இருந்ததாக கூறுகிறார்.

ஒவ்வொருவருக்கும் ரிம100, 5கிலோ அரிசி கொடுக்கப்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

1 elec zahid1“அவர்களைத் தேர்தல் பணியாளர்களாக்கியதையும் அவர்களுக்குப் பணம் கொடுத்ததையும் புத்திசாலித்தனமான செயலாக அவர் நினைக்கிறார். ஆனால், அங்குதான் மாட்டிக்கொண்டார்”, என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

முதல் மனுவில், தேர்தல் பணியாளர்கள் என்ற போர்வையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாகும் எனவே, தேர்தல் சட்டப்படி அது குற்றமாகும் என பிகேஆர் கூறியது.

இரண்டாவது மனு, ஜாஹிட் அளவுக்கு அதிகமான ஆள்களை வேலைக்கு அமர்த்தி தேர்தல் விதிகள் அனுமதிப்பதைவிட அதிகமான தொகையைச் செலவிட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது.

24,000 தேர்தல் பணியாளர்களுக்கு ஆளுக்கு ரிம100, 5கிலோ அரிசி கொடுக்கப்பட்ட வகையில் ரிம2 மில்லியனுக்கும் கூடுதலான தொகை செலவிடப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்றத் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவுத் தொகையான ரிம200,000-த்தைவிட 10 மடங்கு அதிகமாகும்.

எந்தவொரு வேட்பாளரும் இத்தனை பேரைத் தேர்தல் பணியாளர்களாக வைத்துக்கொண்டதில்லை என்றும் பிகேஆர் கூறியது.

தம் செயலைத் தற்காத்துப் பேசினார் ஜாஹிட்

1 zahid2அந்தத் தேர்தல் மனுக்களை பாகான் டத்தோ பிகேஆர் வேட்பாளர் மதி ஹசனும் ஒரு உள்ளூர் வாக்காளரான அஸ்மி சுலைமானும் இன்று ஈப்போ உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

பிகேஆர் எந்தக் காணொளியைச் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியதோ அதே காணொளியில் ஜாஹிட் (இடம்) தம் செயலைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

‘தேர்தல் பணியாளர்களுக்கு’ கொடுக்கப்பட்டது அவர்களின் சேவைக்காகக் கொடுக்கப்பட்ட கட்டணம். அது கையூட்டு ஆகாது என்று வாதிட்டார்.

அவர்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கவில்லை என்றும் தேர்தல் பணியாளர்கள் பிஎன் ஆதரவாளர்களும் ஆவர் என்பதால் அவர்கள் பிஎன் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

புகார்கள் தொடர்பில் ஜாஹிட்டின் கருத்தை அறிய விரும்பி மலேசியா அவரைத் தொடர்புகொள்ள முயன்றது ஆனால், முடியவில்லை. .

 

 

TAGS: