இசி தலைமை பதவி விலகாது: அப்துல் அசீஸ் திட்டவட்டம்

1 aziz ecதேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மனநிறைவு அடையாதவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக இசி தலைமை பதவி விலகாது எனக் கூறுகிறார்.

இசி தலைமை என்பது தம்மையும் துணைத் தலைவரையும் ஐந்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. தாங்கள் அனைவருமே கூட்டரசு அரசமைப்புப்படியும் பேரரசர் மற்றும் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றாரவர்.

எனவே, இசி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக பதவி விலகச் செய்ய முடியாது.

“சட்டப்படிதான் செய்ய முடியும்”, என்றவர் கூறினார்.  அப்துல் அசீஸ் இன்று கோலாலும்பூரில் நேசனல் எஃப்எம் வானொலியில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இசி தலைமை,  தேர்தல் விதிகளையும் அரசமைப்பையும் மீறி நடந்து கொண்டிருந்தால் அதைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பேரரசருக்கு உண்டு.

“நாங்கள் சட்ட விரோதமாக நடந்து கொண்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள்…..குற்றச்சாட்டை நிரூபியுங்கள். அதன்பின்னர் பார்ப்போம்”, என்றாரவர்.

மாற்றரசுக் கட்சியினர் 13வது பொதுத் தேர்தலுக்கு எதிராக மக்களைத் திரட்டி கண்டனக் கூட்டங்கள் நடத்துவதால் தேர்தல் முடிவுகளை மாற்றிவிட முடியாது என்று இசி தலைவர் குறிப்பிட்டார்.

“எதுவானாலும் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்……வெறுமனே அறிக்கைகளை விடுத்து மக்களைக் குழப்ப வேண்டாம்”, என்றார்.

-பெர்னாமா

 

TAGS: