மெட்ரிகுலேசன்:இந்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடலில்லை?

-மு. குலசேகரன், எம்பி, ஜூன் 12, 2013. 

kulaஇந்தியர்களின் பிரச்சனைகளை நாங்கள்தான் முன்னின்று காப்போம் என்று ம.இ.கா ஒருபுறமும், இல்லை உங்களால் 54 வருடங்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆகவே ஹிண்ட்ராப்தான் அப்பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்று புதிதாக அச்சடிக்கப்பட்ட துணை அமைச்சர் வேதமூர்த்தி  மறுபுறமும் சிண்டு பிடித்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்களின் லட்சணத்தை திரை போட்டு காட்ட உருவாகியிருக்கும் இந்த மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டை இவர்கள் எப்படி கையாளப் போகின்றார்கள் என்பதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பு நான் வெளியிட்ட அறிக்கையில், இந்த வருடமும் மெட்ரிகுலேசன் இடம் ஏமாற்றமா என்று எழுதியிருந்தேன்.அதற்கு மறுநாளே பழனிவேவும், டாக்டர் சுப்ராவும்  1500 இடங்கள் நிச்சயம் உண்டு என்று உறுதியளித்திருந்தார்கள். அதனை ஆமோதிப்பது போல், நஜுப் அவர்களும் 1500 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்..

தேர்தலுக்குப் பிறகு நிலை என்ன?

எனக்குக் கிடைக்கப்பட்ட தகவலின்படி இந்த வருடமும் கடந்த ஆண்டைப் போலவே வெறும் 500 இடங்கள் மட்டுமே இந்தியர் மணாவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

7000 இந்திய மாணவர்கள் மனு செய்திருந்தும் வெறும் 500 இடங்கள்தான் என்பது மிகவும் ஏமாற்றத்திற்குரியதும் வருத்தத்திற்குரியதுமான ஒரு செய்தி. அது மட்டுமல்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற நஜிப்பின் உறுதிமொழியின்  முதல் பல்டி இதுவென்றும் கொள்ளலாம்.

அதோடு நஜீப் வேதமூர்த்தியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன் படிக்கையின் கீழ் 7.5% இடங்கள்1 bn najib மெட்ரிகுலேசனில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் ஏறக்குறைய 2,100 இடங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ம.இ.காவிற்கு சொன்ன 1500 இடங்கள் நிரப்பப்படுமா? அல்லது வேதமூர்த்திக்கு கையெழுத்திட்டு கொடுத்ததுபோல் 2,100 இடங்கள் கொடுக்கப்படுமா? அல்லது இரண்டுக்கும் கல்தா கொடுத்துவிட்டு கொடுப்பதை வாங்கிக்கொண்டு கம்மென்று இருங்கள் என்று சொல்ல வருகின்றார்களா? ஏன் இதுவரை வேதமூர்த்தி இதுபற்றி திருவாய் மலரவில்லை? 

தேர்தலுக்குப் பிறகு இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையிலும் பதவிகளிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதனை யாவரும் அறிவோம். ம.இ.காவிற்கு சவால் விடுக்கும் வகையில், அரசியல் சாணக்கியரான நஜிப், தன் அரசியல் எதிரியான வேதமூர்தியையே விலைக்கு வாங்கி துணை அமைச்சர் பதவியும் கொடுத்து தன் அக்குளுக்குள் கோழிக் குஞ்சுவை அமுக்குவது போல் அமுக்கிவிட்டார். இந்தியர்களின் முதன்மைப் பிரச்சனையாக விளங்கும் கல்விக்கு ஒரு துணை அமைச்சராக கமலநாதனையும்  நியமித்து உள்ளார்.

இந்தியர்களின் துயரங்களுக்கு விடை காண 2 முழு அமைச்சர்களும் 2 துணை அமைச்சர்கள் இருந்தும் கூட, இந்த வருட மெட்ரிகுலேசன் இடங்கள் 1500 என்பது எட்டாத கனியாக இருக்கும் வரையில், இவர்களைப்போல் இன்னும் 1000 பேர் வந்தாலும் ஒன்றும் நடவாது என்பதுதான் உண்மை.

எனக்கு வந்த செய்தியின்படி, இந்த வருடத்திற்கான  இந்திய மாணவர்களின் சேர்க்கைப் பட்டியலை துணை அமைச்சர் கமலனாதனிடம் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கொடுக்க மறுத்ததாக தெரிய வந்துள்ளது. இது உண்மையாக இருக்கக் கூடாதென்று நான் விரும்புகிறேன். இந்த குலசேகரன் சொன்னது பொய்யாகவே இருக்கட்டும். ஆனால் இதை உடைத் தெரிவதைப் போல, உடனடியாக, இடம் கிடைத்த எல்லா இந்திய மாணவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் உண்மை நிலவரத்தை மக்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.

எதற்காக ஹிண்ட்ராஃப்பினர் மெட்ரிகுலேசனில் இடம் கிடைக்காதவர்கள் விரைவாக விவரத்துடன் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்கின்றார்கள் என்று புரியவில்லை.

இது வரை வெளியில் இருந்து கேட்டீர்கள்  ஏற்றுக்கொள்ளளாம்! இப்பொழுதுதான் அராசாங்கத்தில் ஓர் அங்கமாக வேதமூர்தியின் வடிவில் பிரதமர் அருகிலேயே மடம் கொண்டிருக்கின்றீர்களே, பிறகெதற்கு உங்களுக்கு வெளியில் இருந்து தகவல் தேவைப்படுகிறது? எல்லாமே கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும்பொழுது அவற்றை கேட்டுப் பெறுவதற்குக் கூட உங்களுக்கு வக்கில்லையா அல்லது உங்களின் செல்வாக்கு அவ்வளவுதானா?

டாக்டர் சுப்ரமணியம் அவர்களே! நீங்கள் கூடவா அந்த பட்டியலைப் பார்க்கவில்லை? ஏன் இந்த மூடு மந்திரம்? மெட்ரிகுலேசன் கல்லூரிகள் திறந்து 2 வாரங்களாகியும் இன்னும் ஒரு தெளிவான விளக்கத்தை இந்த சமுதாயத்திற்கு வழங்காத நீங்கள், அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும்.

palanivel-micமக்களால் நிராகரிக்கப்பட்டு தேர்தலில் தோற்றுவிட்ட பின்பும் அடம்பிடித்தாற்போல் பின்வாசல் வழியாக பேரா மாநிலத்தில் பதிவிக்காக போராடும் பழனிவேல் அவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஒரு தனி மனிதரின்  சபாநாயகர் பதவிக்காக வீராப்பாக சவால் விடுக்கும் நீங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இந்திய மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்க நடைபெறும் இந்த சதிநாச வேலையைத் தடுக்க ஏன் போராடக்கூடாது?

சபாநாயகர் பதவி கிடைக்காதெனில் பேரா அரசாங்கத்தில் எப்பதவியும் ஏற்கமாட்டோம் என்று கூறிய நீங்கள், அதே போன்ற சவாலை மத்திய அரசு முன் நிறுத்தி, இந்திய மாணவர்களுக்கு குறைந்தது 1500 இடங்களாவது கொடுக்கப்படவில்லை என்றால் எல்லா இந்திய அமைச்சர்களும் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடக்கூடாது?

அப்படி   சவால் விட்டு வெற்றியடைவீர்களானால் இந்த குலசேகரனும் உங்களை வாழ்த்தி வாயடைத்துப் போவான். இந்திய மக்களும் உங்களுக்கு கரம் கூப்பி நன்றி கூறுவார்கள்.

TAGS: