செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அமலாக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
ஊடகங்கள் சட்ட எல்லைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதற்கு நடப்புச் சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர் சொன்னார்.
“இந்த நாட்டில் ஐக்கியத்தைச் சீர்குலைக்க இனம் அல்லது மொழி அட்டைகளை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் யாரும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் சட்டத்தை அமலாக்குவோம்.”
நஜிப் நேற்றிரவு கோலாலம்பூரில் எம்பிஐ பெட்ரோனாஸ் பத்திரிக்கை விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வில் பேசினார்.
சமூக ஊடகங்களில் பல்வகைத் தன்மை காரணமாக ‘வெறுப்புணர்வுப் பண்பாடு’ வளர்ந்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
ஆகவே சமூக ஊடகங்களில் சேர்க்கப்படும் விஷயங்களை கட்டுப்படுத்துவதற்கு உருப்படியான வழியை மலேசியர்கள் காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
“இணையத்தில் சேர்க்கப்படும் விஷயங்கள் சட்டத்தை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய சிறந்த கட்டுப்பாட்டு முறை அவசியமாகும்.”
என்றாலும் அது இணையத்தைத் தணிக்கை செய்வதில்லை என்ற அரசாங்க உத்தரவாதத்தை மீறாது என நஜிப் உறுதி அளித்தார்.