எம்பிகளின் பதவி பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க என்றும் எண்ணியதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது.
“2013, ஜூன் 24-இல் நடைபெறும் பதவி பிரமாணச் சடங்கை பிகேஆர் புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வந்துள்ளது.
“ஆனால், பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வைப் புறக்கணிக்க பிகேஆர் என்றும் நினைத்ததில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்”, என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
ஜூன் 11 நாடாளுமன்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று மட்டுமே பக்காத்தான் முடிவு செய்திருந்தது என்றாரவர்.
பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் பதவி பிரமாணச் சடங்கைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தது பல என்ஜிஓ-களின் கூட்டமைப்பான சுவாரா ரக்யாட் 505. தேர்தல் மோசடிகளுக்கு எதிராக கண்டனக் கூட்டங்களை நடத்திவரும் அவ்வமைப்பு, தான் நடத்திவரும் கண்டனப் போராட்டத்துக்கு அந்நடவடிக்கை மேலும் வலுச் சேர்க்கும் என நம்புகிறது.
டிஏபியும் பாஸும் தொடக்கத்திலேயே அந்த எண்ணத்தை நிராகரித்தன.