தடுப்புக் காவலில் இறந்துபோன என்.தர்மேந்திரனின் குடும்பத்தார், அவரது மரணம் தொடர்பில் முதலில் அறிக்கை வெளியிட்ட கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.
கூவின் அறிக்கை, மே 22-இல் கோலாலும்பூர் மருத்துவமனை மரண விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையுடன் முரண்படுகிறது என தர்மேந்திரனின் துணைவியார் மாரி மரியசூசை (படத்தில் நடுவில் இருப்பவர்) கூறினார்.
“நானும் என் குடும்பத்தாரும் (கூவின்) அறிக்கை என் கணவரின் கொலையை மூடி மறைக்கும் தீய நோக்கம் கொண்டது என்று நினைக்கிறோம்”, என்று அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் செய்த புகார் ஒன்றில் கூறியிருக்கிறார்.
மே 21 தர்மேந்திரன் லாக்-அப் ஒன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டதற்கு அடுத்த நாள் கூ வெளியிட்ட அறிக்கையில் அது “மூச்சுத் திணலால்” ஏற்பட்ட மரணம் என்று கூறி இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இரண்டு நாளுக்குப் பின்னர் கோலாலும்பூர் மருத்துவ மனையில் மரணத்துக்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவ நிபுணர் “கடுமையான தாக்குதலுக்கு ஆளானதால்” இறந்து போனார் என்று கூறி இருந்தார்.
தர்மேந்திரனின் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாலாமவர் தலைமறைவாகி விட்டார்.