டிஏபி: கார் விலைகள் குறைந்துள்ளதாக பொய் சொன்ன உத்துசான் மீது நடவடிக்கை எடுங்கள்

carsபிஎன் அரசின் ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்ற  13வது பொதுத் தேர்தல் சுலோகத்திற்கு இணங்க கார் விலைகள்  குறைக்கபட்டுள்ளன என ‘பொய்’ சொன்ன அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான்  மலேசியாவை பினாங்கு அரசாங்கம் சாடியுள்ளது.

அந்த நாளேடு ‘இனவாதத்தையும் அவதூறுகளையும்’ பரப்புவதாக குற்றம் சாட்டிய  அதன் முதலமைச்சர் லிம் குவான் எங், அதன் செய்திகளை நம்ப முடியாது  என்றார்.

“மலிவான கார்களை வழங்கும் தேர்தல் வாக்குறுதியை கூட்டரசு அரசாங்கம் பூர்த்தி  செய்துள்ளதாக உத்துசான் பொய் சொல்லியுள்ளது,” என லிம் இன்று நிருபர்களிடம்
கூறினார்.

“ஆனால் அந்தச் செய்திகளை கார் நிறுவனங்கள் மறுத்துள்ளன,” எனக் கூறிய  அவர், Volkswagen, Peugeot ஆகியவை தங்கள் கார்களின் விலைகள்  குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.cars1

“அது கடுமையான விஷயமாகும். அதிகாரிகள் உத்துசானுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்க வேண்டும். அது எழுதும் எதனையும் நாம் நம்ப முடியாது எனத்  தோன்றுகிறது. ஒரு வேளை அந்தப் பத்திரிக்கையில் உள்ள தேதியை மட்டுமே  நம்பலாம்,” என லிம் கிண்டலாகக் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் 10 வகையான கார்களின்  விலைகள் 449 ரிங்கிட் முதல் 12,775 ரிங்கிட் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக  ஜுன் 10ம் தேதி உத்துசான் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

Peugeot, Proton, Perodua, Volkswagen, Honda போன்ற கார்கள் விலை
குறைக்கப்பட்டுள்ள கார்களில் அடங்கும் என்றும் அந்த ஏடு குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே பக்காத்தான் நடத்தும் ‘#TurunkanHargaKereta’ இயக்கத்தை
சமாளிப்பதற்கு அம்னோ விரக்தி அடைந்த நிலையில் ‘தீவிர முயற்சி’ செய்வதை  உத்துசான் செய்தி காட்டுவதாக பிகேஆர் தெரிவித்தது.

“ஒரு காலத்தில் பெருமை மிக்க மலாய் பத்திரிகையாக திகழ்ந்த உத்துசான் தனது  அரசியல் எஜமானரான அம்னோவுக்காக இயங்குவதால் இப்போது மோசமான  இதழியலுக்கு அடையாளச் சின்னமாக திகழ்கின்றது,” என அதன் தொடர்புப் பிரிவு
இயக்குநரான நிக் நஸாமி நிக் அகமட் சொன்னார்.

 

TAGS: