மகாதிர்: எதிர்தரப்பிடம் அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்

drmமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நாட்டின் ஜனநாயக முறையை இழிவுபடுத்தி வரும் மாற்றரசுக் கட்சியினரிடம் அரசாங்கம் அனுசரணையாக நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.

“கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கக்கூடாது”. நேற்று கோலாலும்பூரில் லங்காவி அனைத்துலகக் கலந்துரையாடல் (எல்ஐடி) தொடர்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.

13வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் மாற்றரசுக் கட்சியினர் அரசாங்கத்தையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்றாரவர்.

“முதலில் மக்கள் தேர்வை மதிப்பதாகக் கூறினார்கள். இப்போது அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்கிறார்கள். ஜனநாயக முறையைப் புறக்கணித்து தெரு ஆர்ப்பாட்டங்களை நடத்த விரும்புகிறார்கள்”.

முன்னதாக விருந்தில் உரையாற்றிய மகாதிர், அரசாங்கத் திட்டங்களின் செயலாக்கத்தினாலும் ஒருங்கிணைப்பினாலும் மக்களும் பொருளாதாரமும் நன்மை அடைந்திருப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் வியூகங்களில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பதும் ஒன்று. வரிச் சலுகைகள் அந்நிய நேரடி முதலீட்டை(எப்டிஐ) ஊக்குவிக்கின்றன.

“எப்டிஐ கூடுதலாக வரும்போது வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். எப்டிஐ பொருளாதாரத்தையும் முடுக்கி விடுகிறது”, என்றாரவர்.

 

 

TAGS: