21 தேர்தல் மனுக்களை பிஎன் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம் (இசி) ஏன் விலக வேண்டும் என்பதற்குக் கூடுதல் காரணங்களை வழங்குவதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொல்கிறார்.
“தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஒரு மாதமாக ஆட்சேபித்து வருகின்றனர்.”
“அண்மைய காலமாக சில தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளாத ஆளும் பிஎன் கூட்டணியும் எங்களுடன் சேர்ந்து கொண்டுள்ளது.”
“இசி தலைவருக்கு இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் ? இப்போதே பதவி விலகுங்கள்,” என சுவா இன்று விடுத்த அறிக்கை வலியுறுத்தியது.
தேர்தல் முடிவுகளில் சிலர் மனநிறைவு கொள்ளாததால் இசி உறுப்பினர்கள் பதவி துறக்க மாட்டார்கள் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் தெரிவித்துள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதில் இசி ‘மோசமாக தோல்வி கண்டு விட்டது,” என்ற உண்மை நிலையை பிஎன் மனுக்கள்
வலுப்படுத்தியுள்ளதாகவும் தியான் சுவா சொன்னார்.
அழியா மையில் சேர்க்கப்படும் சில்வர் நைட்டிரேட் அளவு ஒரு விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என சுகாதார அமைச்சு அறிவுரை கூறியதால் தான் பொதுத் தேர்தலில் அந்த மை தோல்வி அடைந்தது எனக் கூறுவதின் வழி மக்களுக்கு அது தவறான எண்ணத்தைக் கொடுத்துள்ளது என்று பத்து எம்பி-யுமான சுவா சொன்னார்.
அந்த அழியா மை குறித்து இசி சுகாதார அமைச்சிடமிருந்து எந்த
ஆலோசனையையும் பெறவில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் வெளிப்படையாக அறிவித்தார்.