எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு தண்டனை

abu_islam    எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித மறையான பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் இவரின் நிஜப் பெயர் அகமது முகமது மஹ்மூத் ஆகும்.

அமெரிக்காவில் வைத்து தயாரிக்கப்பட்டிருந்த இஸ்லாத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை எதிர்த்து கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நடந்திருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்றிருந்தவர் இவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அபு இஸ்லாமின் மகனுக்கும் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் இருவரும் சில நூறு டாலர்கள் கணக்கில் அபராதம் செலுத்தினால் இவர்களது சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தை நிந்தித்ததற்காக குற்றங்காணப்படுவதென்பது எகிப்தில் பொதுவாக நடக்கின்ற விஷயம் என்றாலும், வேறு ஒரு மதத்தை நிந்தித்ததற்காக அங்கு ஒருவர் குற்றங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்படுவதென்பது அரிதாகவே நடந்துள்ளது.