ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் முன்பு ஆஜராகத் தவறியதற்காக நகைச் சுவை நடிகரும் பாடலாசிரியருமான போப் லோக்மானைக் கைது செய்வதற்கான ஆணைக்கு அந்தத் துறை விண்ணப்பித்துக் கொள்ளும்.
“அவர் நேற்று காலை ஜயிஸ் தலைமையகத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர் பிடிவாதமாக வர மறுக்கிறார். நாங்கள் அவரைக் கைது செய்வதற்கான ஆணைக்கு விண்ணப்பிப்போம்,” என ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசேன் சொன்னதாக இன்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு உலு லங்காட்டில் உள்ள சூராவ் ஒன்றில் அனுமதி பெறாமல் சமய உரை நிகழ்த்தியதற்காக போப் மீது ஜயிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அதற்கு அடுத்த நாள் நண்பகலில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு நாட்களாகியும் வரவில்லை.
வேண்டுமென்றே வாக்குமூலம் கொடுக்கத் தவறியதற்காக 2003ம் ஆண்டுக்கான சிலாங்கூர் ஷாரியா கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் 12பி பிரிவின் கீழ் போப் மீது குற்றம் சாட்டப்பட முடியும்.
இதனிடையே அன்றிரவு தாம் சமய உரை நிகழ்த்தவில்லை என்றும் அரசியல் விஷயங்களைப் பேசவில்லை என்றும் போப் கூறியிருப்பதாக பாஸ் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குநர் முகமட் சானி ஹம்சான் சொன்னார்.
சிலாங்கூரில் உள்ள பள்ளிவாசல்களிலும் சூராவ்களிலும் அரசியல்வாதிகள் உரை நிகழ்த்துவதற்கு கடந்த மாதம் ஜயிஸ் தடை விதித்தது.
1980களில் ‘இசபெல்லா’ என்னும் குழுவில் இணைந்திருந்த போப், கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த மெர்லிமாவ், கெர்டாவ் இடைத் தேர்தல்களில் பக்காத்தான் ராக்யாட்டுக்காக போப் பிரச்சாரம் செய்தது பலரது கண்களை உறுத்தியது.
அதற்குப் பின்னர் அவர் சொற்பொழிவு நிகழ்வுகளில் அதிகம் காணப்பட்டார்.