மெட்ரிகுலேசன் இட விவகாரம்: வேதமூர்த்தி மௌனம் காப்பது ஏன்?

-சேவியர் ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்.ஜூன் 26, 2013.

Dr-Xavier-Jeyakumarநடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்  ஒவ்வொரு நாளும்  இந்திய சமுதாயத்திற்குப் பல்வேறு  வாக்குறுதிகளை வழங்கியே, துணை அமைச்சர் பதவியைப் பிடித்து விட்ட முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்  பொ. வேதமூர்த்தி, இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் இட விவகாரத்தில் மௌனம் காப்பது ஏமாற்றமாக  இருக்கிறது. இந்தியர்களின்  குடியுரிமை விவகாரத்தில் கூறியுள்ளதைப் போன்று இதற்கும் 5 ஆண்டுகளில்  தீர்வு காணலாம் என்று  இருக்கிறார என்பதனை இந்தியர்களுக்கு விளக்க வேண்டும்.

ஹிண்ட்ராப்பின்  ஒப்பந்தப்படி  மெட்ரிகுலேசனில்  7.5 விழுக்காடு இடங்களை  2100 மாணவர்களுக்கு  வழங்க வேண்டும், ஆனால் கடந்த  இரண்டு ஆண்டுகளாக இந்தியர்களுக்கு வாக்களித்த  1500 இடங்களைக் கூட வழங்காமல், பல்வேறு சாக்குபோக்குகளை பிரதமர் நஜிப்பின்  நம்பிக்கை அரசாங்கம் கூறி வந்தது. அதே பாணியை இன்னும்  பின்பற்றி வருவதும், அதற்குத்  துணைபோகும் ரீதியில் இந்திய பிரதிநிதியாகக்  கல்வி அமைச்சில்  பதவி வகிக்கும் பி.கமலநாதன்  அறிக்கை விட்டிருப்பது  ஏற்புடையதாகயில்லை.

இந்த விவகாரத்தின் மீது பொதுத்தேர்தலுக்கு முன்பே 1-5- 2013ல் நான் பத்திரிக்கைகளுக்கு  அறிக்கை விட்டிருந்தேன். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்த புகாரின்  அடிப்படையில், இந்திய மாணவர்களின்  மெட்ரிகுலேசன் இட விவகாரத்தில் ம.இகாவை எச்சரித்திருந்தேன். ஆனால், கல்வி அமைச்சின் செய்கை பல பெற்றோரகள் அஞ்சியதைப் போன்றே, இன்றுவரை  நம் மாணவர்களை  அல்லல்படுத்தி வருகிறது.

அன்றைய  எனது அறிக்கையில், கல்வி அமைச்சு அதிகாரி ஏப்ரல்  29 ந்தேதி  அமைச்சர்  டாக்டர்  எஸ். சுப்பரமணியத்திற்கு விளக்கம் அளித்தற்கான காரணத்தைக் கேட்டும், இந்திய சமுதாயம் தனி மனிதர்களின் வாக்குறுதிகளை மட்டும் நம்பி ஏமாறாமல் கவனமாக இருக்கவேண்டும் கேட்டுக் கொண்டேன்.

 பிரதமரும், கல்வி  அமைச்சரும்   இந்தியர்களின் மெட்ரிகுலேசன் இடம் மற்றும் அதன் எண்ணிக்கை குறித்த கல்வி இலாக்காவுக்கு  எந்த நிரந்தர ஆணையும்  இடாதவரையில் நமது மாணவர்களின் நிலை  ஒவ்வொரு  ஆண்டும் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகவே இருக்கும். இனியும் மெட்ரிகுலேசன் இந்தியர்களின் வாக்குகளைக் கவர  வீசப்படும் தூண்டிலாக  இருக்க வேண்டியதில்லை. எந்தக் கட்சி ஆட்சி என்பதனை விட, நம் மாணவர்களின் கல்வி மேம்பாடும் நமது சமுதாயத்தின் முன்னேற்றமும் நமக்கு மிக அவசியம்,  அவசரம் என்பதனைக் கவனத்தில் கொண்டு  செயல்படுவோம்.

இதே நிலை  உயர் கல்விக்கூடங்களில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்கள், தமிழ்ப் பள்ளிகளின் மறுமலர்ச்சிக்கு  வாக்களிக்கப்பட்டுள்ள மானியங்கள், இந்தியர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள  தெக்குன் கடனுதவி, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் உரிமத்திற்கான உத்தரவாதம், இந்திய டாக்ஸி ஓட்டுனர்களுக்கு மலிவு விலை வீடு, இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளில்  7.5 விழுக்காடு, பொருளாதாரத்தில் 3 விழுக்காடு பங்குரிமை,  போன்று எல்லா வாக்குறுதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட இலாக்காகள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும், அதற்கான வேலைகளைச் சம்பந்தப்பட்டவர்கள்  செய்ய வேண்டும்.

அதன் வழியே எல்லாப் பிரஜைகளும் எந்தத் தடையுமின்றி,, எவரின் தயவுமின்றி அவரவரின் உரிமையைப் பெற முடியும். மக்கள்  வாழ்வும்  வளர்ச்சியும் விரைவாக  அதன்  இலக்கை அடைய முடியும்.

 

 

TAGS: