மனித வள அமைச்சர் ‘ரிச்சர்ட் ரியோட்-டின் கல்வித் தகுதிகள் பற்றிய விவரம் அரசாங்க இணையத் தளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாக டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறுகிறார்.
அந்த விவரம் ‘ஜோடிக்கப்பட்டது’ அல்ல என அவர் சொன்னார்.
ரிச்சர்டும் இன்னொரு அமைச்சரும் ‘போலி பட்டங்களை’ வைத்துள்ளதாக நேற்றுக் கூறிக் கொண்ட ஒங், காரணம் அவர்கள் அந்தப் பட்டங்களைப் பெற்ற பல்கலைக்கழகங்கள் ‘பட்டங்களை வெளியிடும் ஆலைகள்’ எனத் தெரிவித்தார்.
அந்தக் குற்றச்சாட்டை மறுத்த ரிச்சர்ட், தாம் Hertfordshire பல்கலைக்கழகத்தில் படித்ததாகச் சொன்னார். ஒங் குறிப்பிட்டுள்ள அமெரிக்க உயர் கல்விக் கூடத்தில் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் முந்திய தவணைக் காலத்தில் துணை அமைச்சராக ரிச்சர்ட் பணி புரிந்த வெளியுறவு அமைச்சின் இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தை ஒங் இன்று காட்டினார்.
பிரஸ்டனில் உள்ள அமெரிக்க கல்வி நிலையம் ஒன்றிலிருந்து ரிச்சர்டின் கல்வித் தகுதி பெறப்பட்டதாக அதில் குறிக்கப்பட்டுள்ளது.