இரண்டரை வயதில் ஷேக்ஸ்பியர் இலக்கியத்தை படிக்கும் அதிசய குழந்தை: அறிவு ஜீவிகள் குழுவிலும் இடம் பெற்று சாதனை

worldnews28613bபிரிட்டனில், இரண்டரை வயது குழந்தை, அறிவு ஜீவிகள் குழுவில் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, டீன் மற்றும் கெர்ரி ஆன் தம்பதியின் மகன், ஆடம் கிர்பி. இரண்டரை வயது நிரம்பிய இந்தக் குழந்தை, தன் திறமையை வெளிப்படுத்துதற்கான, அறிவு ஜீவி போட்டியில் சமீபத்தில் பங்கேற்றது.

ஷேக்ஸ்பியர் எழுத்துக்களை இந்தக் குழந்தை அப்படியே வாசித்தது. அதுபோல், ஜப்பான் மற்றும் பிரெஞ்ச் மொழி எழுத்துக்களையும் படித்து காண்பித்தது.

அதுமட்டுமின்றி, 100 வார்த்தைகளை எழுத்துக் கூட்டி படித்ததுடன், ரசாயனப் பொருட்களின் பெயர்களையும் வரிசை மாறாமல் படித்து காண்பித்து அசத்தியது.

குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வயதில், சிரமப்பட்டு, மெதுவாக படிப்பர். ஆனால், ஆடமைப் பொறுத்தவரை, புத்தகங்களையே சாதாரணமாக படிக்கிறான். இது, அவனது புத்திக்கூர்மையை வெளிப்படுத்துகிறது.

இது குறித்து ஆடமின் பெற்றோர் கூறுகையில், “ஆடமிடம் விலங்குகளின் படங்களைக் காண்பிப்போம். ஒரே மாதிரி உருவம் உள்ள காண்டாமிருகம் மற்றும் நீர் யானை ஆகியவற்றை காண்பித்தாலும், மிகச் சரியாக அந்தந்த விலங்குகளின் பெயரை சொல்லி விடுவான்’ என்றனர்.

இது குறித்து, “மென்சா’ அறிவு ஜீவிகள் குழுவின் முதன்மை செயல் அலுவலர், ஜான் ஸ்டிவனேஜ் கூறியதாவது:ஆடமின் புத்திக்கூர்மை (ஐ.க்யூ.,) அளவு, 41 ஆக உள்ளது. இது, அமெரிக்க அதிபர், ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் ஆகியோருக்கு இணையான திறமையை இந்த குழந்தை பெற்றுள்ளதைக் காட்டுகிறது.

இந்தக் குழந்தை, அறிவு ஜீவிகள் குழுவான, “மென்சா’வில் இடம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இந்த குழுவில் இடம் பெற்றவன் ஆடம் தான். இதற்கு முன், ஆறு வயதான, லண்டனைச் சேர்ந்த, டான் ரோபர்ட்ஸ், இக்குழுவில் இடம் பிடித்திருந்தான்.இவ்வாறு அவர் கூறினார்.