எகிப்து : இராணுவத்தின் காலக்கெடுவை நிராகரித்த அதிபர் மோர்சி

worldnews03713bஎகிப்தில் நிலவுகின்ற நெருக்கடியை 48 மணிநேரத்துக்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்று இராணுவம் கொடுத்த காலக்கெடுவை நிராகரித்துள்ள அந்த நாட்டின் அதிபர் முஹமட் மோர்சி அவர்கள், இராணுவத்தின் இந்தக் காலக்கெடு குழப்பத்தை மாத்திரமே ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அதிபர் மோர்சி தனது நல்லிணக்கத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று அதிபரின் அறிக்கை ஒன்று செவ்வாயன்று காலையில் கூறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கமும், எதிர்க்கட்சியும் தவறினால், அதில் தாம் தலையிடுவோம் என்று இராணுவம் எச்சரித்துள்ளது.

ஆனால், இந்தக் காலக்கெடு என்பது ஒரு இராணுவப் புரட்சிக்கு வழி செய்யும் என்ற கருத்தை இராணுவம் மறுத்துள்ளது.

அதேவேளை, எகிப்தின் வெளியுறவு அமைச்சர் முஹமட் கமல் அம்ர் அவர்கள் செவ்வாயன்று இராஜினாமா செய்ததாக அரச செய்தி நிறுவனமான மெனா கூறியுள்ளது.

இந்த இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஏற்கனவே இராஜினாமா செய்வார்கள் என்று பேசப்படும் மேலும் 5 அமைச்சர்கள் அவருடன் இணைந்துகொள்வார்கள்.

அதிபர் மோர்சி பதவி விலக வேண்டும் என்று ஞாயிறன்று பல லட்சக்கணக்கானோர் அங்கு போராட்டம் நடத்தினார்கள்.

முன்னாள் அதிபர் முபாரக் அவர்கள் ஒரு புரட்சியின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், 2012 ஆம் ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதி இஸ்லாமியவாத அதிபரான மோர்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். -BBC