தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது கரிமி, கூறுகிறார்.
பாகிஸ்தான் தாலிபான்களுக்கு புகலிடம் தருவதுடன் அவர்களைக் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறது என்று பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறிய ஜெனரல் கரிமி, மேலு, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்த தாலிபான் தீவிரவாதிகளை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறது என்றார்.
ஆனால் தாலிபான் தீவிரவாதிகளின் மீது தனக்கு ஏதும் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்துவருகிறது. மேலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கிடையே இருக்கும் நீண்ட பாதுகாக்கப்படாத எல்லைப்புறத்தைக் கண்காணிப்பதில் இருக்கும் சிரமத்தையும் அது சுட்டிக்காட்டுகிறது.
தாலிபான் தலைவர்கள் பாகிஸ்தானிய நிலப்பரப்பில் புகுந்துள்ளார்கள் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்று ஏப்ரலில் கசியவிடப்பட்ட நேட்டோ அறிக்கை ஒன்று கூறியது.
ஜெனெரல் கரிமியின் கருத்துக்கள், அமெரிக்கா, தாலிபான்களுடன் அமைதிப்பேச்சுவார்த்தைகளை நடத்த முயன்று வரும் நேரத்திலும், ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ அணியினரின் போர்ப்படைகள் தொடர்ந்து விலக்கிக்கொள்ளப்பட்டுவரும் நிலையிலும் வருகின்றன என்று பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். -BBC