பொலிவியா அதிபர் பறக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு தென் அமெரிக்கா கண்டனம்

worldnews05713bபொலிவியாவின் அதிபர் ஈவோ மொராலெஸ் சென்ற விமானம் ஐரோப்பிய வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விவாதிப்பதற்காக தென் அமெரிக்க நாடுகளின் அமைப்பான உனாசுர் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

மொராலெஸ் நடத்தப்பட்ட விதம் குறித்து தென் அமெரிக்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொலிவியாவின் மரியாதை மட்டுமல்லாது தென் அமெரிக்க கண்டத்தின் கௌரவத்துக்கே ஒரு அச்சுறுத்தலாக நடந்த சம்பவம் இது என அவர்கள் வர்ணித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தனது பங்குக்காக பிரான்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிவரும் அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஆய்வாளர் எட்வர்ட் ஸ்னோடென் ஒளிந்திருக்கிறார் என்ற சந்தேகம் காரணமாக அதிபர் சென்ற விமானம் தமது வான்பரப்பில் பறக்க பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்தன.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக பொலிவியத் தலைநகர் லா பாஸிலுள்ள பிரஞ்சு தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பிரஞ்சுக் கொடி, ஐரோப்பிய ஒன்றியக் கொடி ஆகியவற்றை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். -BBC