ஸ்நோடனுக்கு தஞ்சமளிக்க நிக்கரகுவாவும் வெனிசூவேலாவும் தயார்

worldnews07713bஅமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுவரும், அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடனுக்கு அரசியல் தஞ்சமளிப்பதற்கு வெனிசூவேலாவும் நிக்கரகுவாவும் தயார் என்று அறிவித்துள்ளன.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் விமானநிலையத்தின் பயணிகள் விமானம் விட்டு விமானம் மாறுவதற்காக உள்ள பகுதிக்குள் ஸ்நோடன் தற்போது தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

ஏற்கனவே 21 நாடுகளிடம் ஸ்நோடன் அரசியல் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பல நாடுகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டன.

இப்போது மேலும் 6 நாடுகளிடம் தஞ்சக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் கூறியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் தலையீடு இருக்கும் என்ற காரணத்தால் எந்தந்த நாடுகள் என்று கூற விக்கிலீக்ஸ் மறுத்துவிட்டது.

இப்போது வெனிசூவேலாவும் நிக்கரகுவாவும் அவருக்கு சாதகமான பதிலை அளித்துள்ளன.

ஆனால் இந்த நாடுகளுக்கு சென்றுசேருவது தான் ஸ்நோடனுக்குள்ள சிரமம் என்று மொஸ்கோவிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

ஸ்நோடனை ஏற்றிய விமானம் ஐரோப்பிய வான்பரப்புக்குள் பறக்கமுடியாமல் தடைவிதிக்கப்படலாம்.

ஸ்நோடன் ஒளிந்திருப்பதாக சந்தேகப்பட்டே இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பொலிவியாவின் அதிபர் மொஸ்கோ சென்று திரும்பிய விமானத்தை பல ஐரோப்பிய நாடுகள் தமது வான்பரப்புக்குள் வரத் தடைவிதித்தன.

வெனிசூவேலாவின் சுதந்திர தின மேடையில் பேசிய அதிபர் நிக்கோலாஸ் மதுரோ ‘வெனிசூவேலாவின் அரசு தலைவர் என்ற ரீதியில், நான் அந்த அமெரிக்க இளைஞன் ஸ்நோடனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தஞ்சமளிக்கத் தீர்மானித்துள்ளேன். வட-அமெரிக்க ஒடுக்குமுறையிலிருந்து தப்பி அவர் பொலிவார் மற்றும் சாவேஸ் பிறந்த இந்த மண்ணுக்கு வரமுடியும்’ என்று கூறிக்கொள்கிறேன் என்று கூறினார்.

அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பு செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியமைக்காக அவர்மீது அமெரிக்க அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

மொஸ்கோவிலுள்ள நிக்கரகுவா தூதரகத்திற்கு ஸ்நோடனின் விண்ணப்பம் வந்திருப்பதாக அதிபர் டேனியல் ஓட்டேகா கூறுகிறார்.

‘தஞ்சம்பெறுவதற்கான உரிமையை மதிக்கிறோம். சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் நாங்கள் ஸ்நோடனை மகிழ்ச்சியோடு வரவேற்போம். இங்கு நிக்கரகுவா அவருக்கு அடைக்கலம் கொடுக்கும்’ என்றார் அதிபர் டேனியல் ஒட்டேகா.

1980-களில் நிக்கரகுவாவில் இடதுசாரி சண்டினிஸ்டா இயக்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில், முதன்முதலாக பதவிக்கு வந்த காலத்திலிருந்தே டேனியல் ஒட்டேகா அமெரிக்காவுக்கு சவால் விடுத்துவருகிறார்.

முன்னதாக, பொலிவியா ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார் என்ற அறிகுறிகளைக் காட்டியிருந்த நிலையிலேயே அந்நாட்டு அதிபரின் விமானத்திற்கு பிரான்ஸ், போர்த்துகல், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்தன. அதனால் அந்த விமானம் ஆஸ்ட்ரியாவில் 13 மணிநேரம் தரித்துநிற்க வேண்டியேற்பட்டது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

30 வயதான எட்வர்ட் ஸ்நோடன் ஆரம்பத்தில் ஹாங்காங் தப்பிச் சென்றிருந்தார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் மாஸ்கோ சென்றார். -BBC