அயர்லாந்தில் வசித்து வந்த சவிதா என்ற இந்திய பெண் பல் மருத்துவர் அங்குள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால் கடந்த வருடம் இறந்து போனார். அப்போது நாடு முழுவதும் பலமான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இதுகுறித்த காரசாரமான விவாதங்கள் எழுந்தன.
பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதல்கட்ட வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற இந்த மசோதா, வரும் புதன்கிழமை இறுதி வாக்கெடுப்பிற்குப் பின் சட்டமாக இயற்றப்பட இருக்கிறது.
இதனிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக இன்று டப்ளின் தெருக்களில் ஊர்வலம் சென்றனர். கைகளில் ஜெபமாலையையும், மசோதாவைத் நிறைவேற்ற வேண்டாம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகங்கள் தாங்கிய அட்டைகளையும் பிடித்துக் கொண்டு 35 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்தனர் என்று காவல்துறையைச் சேர்ந்த கர்டாய் தெரிவித்தார்.
ராலி பார் லைப் என்ற இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்த அமைப்பினர் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றதாகவும், அயர்லாந்தில் கருக்கலைப்பிற்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய ஊர்வலம் இது என்றும் தெரிவித்தனர்.
ஆயினும், அயர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஆலன் ஷட்டர் இந்த கருக்கலைப்பு சட்டம் சென்ற வருடம் இயற்றப்பட்டிருந்தால் சவிதா காப்பாற்றப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார். அதேபோல் புதன்கிழமை இறுதி வாக்கெடுப்பிற்கு வரும் இந்த மசோதாவை, கூட்டணி அரசில் இருக்கும் உறுப்பினர்களை ஆதரிக்கும்படியும், இதனை எதிர்ப்பவர்களை விலகி இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.