எகிப்தில் மொர்ஸி ஆதரவாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு

worldnews09713aஎகிப்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ முகாமொன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் மொர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவக் கட்டடத்துக்கு முன்பாகவே, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி காவல்துறையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மொர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், 35 பேர்வரையில் பலியானதாகக் கூறுகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இராணுவத் தரப்போ, பயங்கரவாதக் கும்பலொன்று முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகக் கூறுகிறது.

இதற்கிடையே, மொர்ஸியை பதிவியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை ஆதரித்திருந்த இஸ்லாமிய வாத அல்- நூர் கட்சி, இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

இன்றைய தாக்குதல் சம்பவம் உண்மையில் ஒரு படுகொலை நடவடிக்கை என்று அக்கட்சி வர்ணித்துள்ளது.