சௌதி அரேபிய இளவரசி எனக் குறிப்பிடப்படும் பெண்ணொருவர் மீது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மனிதக் கடத்தல் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கென்யப் பெண்ணொருவரை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் அளவுக்கு வேலை வாங்கிவிட்டு, பேசிய கூலிக்கும் மிகக் குறைவாகவே கொடுத்ததாக மெஷாயெல் அலெய்பான் என்றழைக்கப்படும் இந்த 42 வயது ராஜகுடும்பத்துப் பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்தக் கென்யப் பெண்ணின் கடவுச்சீட்டை பறித்துவைத்துக்கொண்டு, அவர் வேலையை விட்டு போக முடியாமலும் அலெய்பான் தடுத்துவந்துள்ளார் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அலெய்பானின் சட்டத்தரணிகளோ, வேலை நேரம் சம்பந்தமான ஒரு முதலாளி தொழிலாளி தகராறுதான் இதுவேயொழிய வேறொன்றுமில்லை என்று கூறுகின்றனர்.
சௌதி ராஜ குடும்பத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான இளவரசர் அப்துல் ரஹ்மான் பின் நாசர் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் அவர்களுடைய ஆறு மனைவியரில் மெஷாயலும் ஒருவர் என கலிஃபோர்னிய சட்ட அரசு தரப்பு சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
போனவருடம் இந்தக் கென்யப் பெண் சௌதி அரேபியாவின் ஒரு வேலையாள் ஒப்பந்த நிறுவனம் மூலமாக இரண்டு வருட காலத்துக்கு அல்பயானிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், வாரத்தில் ஐந்து நாள் வேலை பார்க்க வேண்டும், அதற்கு 1600 டாலர்கள் சம்பளம் கொடுக்கப்படும் என்று அவரது வேலை ஒப்பந்தம் கூறுகிறது.
ஆனால் மாதத்துக்கு 220 டாலர்கள் ஊதியமே இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் இவர் வேலை வாங்கப்பட்டதாகவும் சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
30 வயதுடைய இந்தப் பெண் கென்யாவிலிருந்து வேலைக்காக சௌதி அரேபியா வந்த உடனேயே அவரது கடவுச்சீட்டு அவரிடம் இருந்து வாங்கப்பட்டுவிட்டது என்றும், அவர் அலெய்பானுடன் அமெரிக்கா வருவதற்கான பயண நேரத்தில் மட்டும்தான் அது அவரிடம் தரப்பட்டிருந்தது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டு எட்டு பேரின் அன்றாட தேவைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய விதமாக இப்பெண்ணிடம் வேலை வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அவர் அந்த வீட்டிலிருந்து தப்பித்து பஸ் ஏறி பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் புகாரை அடுத்து அலெய்பான் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஐந்து மில்லியன் டாலர்கள் பிணைத்தொகை செலுத்தி அவர் வெளியில் வந்துள்ளார் என்றாலும், அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டு, இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கும் பட்டி அவரது உடலில் கட்டப்பட்டுள்ளது.
மனிதக் கடத்தலுக்கான தண்டனைகளை கடந்த நவம்பரில்தான் கலிஃபோர்னிய மக்கள் வாக்களித்து கடுமையாக்கியிருந்தனர்.
அலெய்பான் குற்றங்காணப்பட்டார் என்றால், அவருக்கு 12 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC