வாஷிங்டன்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற ஒத்துழைக்கும்படி, அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில், சட்ட விரோதமாக, ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இவர்களில், 2.40 லட்சம் பேர் இந்தியர்கள்.சட்ட விரோதமாக தங்கியுள்ள இவர்களை வெளியேற்றும்படி, குடியரசு கட்சி எம்.பி.,க்கள் பலர் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், இவர்களை வெளியேற்றுவதை தவிர்க்கும், புதிய சட்டத் திருத்த மசோதாவை ஒபாமா அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த மசோதாவுக்கு, அமெரிக்க செனட் சபை, ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், குடியரசு கட்சி எம்.பி.,க்கள் அதிகம் உள்ள பிரதிநிதிகள் சபையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டும், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள், சபையில் குறைவாக உள்ளனர்.
எனவே, இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஒபாமா ஆற்றிய ரேடியோ உரையில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினர் பலர், குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர்.
இதில் கல்வி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் உள்ளனர். இவர்களால், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
எனவே, இவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கு வழி செய்யும் மசோதவை நிறைவேற்ற உதவும்படி, குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு இ-மெயில் மற்றும் “பேஸ்புக்’ போன்றவற்றின் மூலம், மக்கள் வற்புறுத்த வேண்டும். இவ்வாறு, ஒபாமா கூறியுள்ளார்.