மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன

worldnews17713aObesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிப்பிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத்திருப்பதாக சர்வதேச மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிகப்படியான உடல்பருமன் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் முதல், டயபடீஸ் எனப்படும் ஆயுள் முழுவதும் நீடிக்கும் நீரிழிவுநோய் வரை பல்வேறுவகையான நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே உலக அளவில், குறிப்பாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும், இந்தியா போன்ற வேகமாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த அதிகரித்த உடல்பருமன் என்பது மிகப்பெரும் சுகாதார பிரச்சனையாக மாறிவருகிறது.

இந்த அதிகரித்த உடல்பருமன் என்பதன் பின்னணியில் மரபணுக்காரணிகள் இருப்பதாக ஏற்கெனவே சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எப்டிஓ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குறிப்பிட்ட மரபணுவின் சில ரகங்கள் இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிட வயிறு பெரிதாக இருப்பதாக ஏற்கெனவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த மாற்றமடைந்த எப்டிஓ மரபணுவுக்கும் வயிறு பெரிதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு என்பது இதுவரை சரியாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்திருக்கிறது.

தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இருக்கும் ஆய்வாளர்கள் இந்த தொடர்புக்கான காரணியை கண்டறிந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மனிதர்களின் பசியைத்தூண்டும் நொதிமத்தின் பெயர் க்ரெலின். பசியைத்தூண்டும் இந்த க்ரெலின் என்கிற நொதிமத்தை இந்த எப்டிஓ என்கிற மரபணுக்கள் சிலருக்கு அதிகம் சுரப்பது தான் அவர்களை அதிகம் சாப்பிடத்தூண்டுவதாகவும், அதன் விளைவாக அவர்கள் அதிக பருமனும் உடல் எடையும் உள்ளவர்களாக மாறுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மனிதர்கள் அனைவரிடமுமே இந்த எப்டிவோ மரபணுக்கள் இருக்கின்றன. மனிதக் கரு உருவாகும்போது தந்தையிடமிருந்து ஒருபகுதி எப்டிஓ மரபணுவும், தாயிடமிருந்து ஒருபகுதி எப்டிஓ மரபணுவும் குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது.

இதில் ஏதாவது ஒருபகுதி எப்டிஓ மரபணுவில் குறைபாடு இருந்தால் பெரிய பிரச்சனையில்லை. ஒருவேளை தாய் தந்தையிடமிருந்து குழந்தைக்கு அளிக்கப்படும் இரண்டு எப்டிஓ மரபணுக்களின் பகுதிகளுமே குறைபாடு உடையவையாக இருந்தால் இரண்டு குறைபாடுடைய எப்டிஓ மரபணுவின் பகுதிகளுடன் பிறக்கும் குழந்தைக்கு இயற்கையிலேயே பசியைத்தூண்டும் க்ரெலின் நொதிமம் அதிகம் சுரக்கும் என்பதால் அந்த குழந்தைகள் கூடுதலாக சாப்பிடக்கூடிய இயல்புடன் இருக்கும் என்றும் இதுவே பிற்காலத்தில் அதிக உடல் எடை பிரச்சனையாக மாறும் என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவரகளுக்கு, பசியைத்தூண்டும் நொதிமமான க்ரெலின் சுரப்பை குறைக்கவல்ல புரோட்டீன் சத்து அதிகம் இருக்கும் உணவுகள் சாப்பிடக்கொடுப்பது அவர்களின் உடல் எடையை குறைக்க உதவும் என்றும் இவர்கள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறும் சென்னையில் இருக்கும் உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன், புரதச்சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதன் மூலம் தேவைக்கதிகமான உடல்பருமனுடன் இருப்பதை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். -BBC