உளவுத்துறைச் சண்டைகளை விட அமெரிக்காவின் உறவுதான் முக்கியம்

worldnews18713aஉளவுத்துறைகள் இடையிலான சண்டைகளைவிட அமெரிக்காவுடனான உறவுதான் முக்கியமானது என்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் தொடர்பில் அதிபர் புடின் இறுதியாக வெளிப்படுத்தியுள்ள கருத்தில், ரஷ்ய- அமெரிக்க உறவுகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வேலைகளை செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, ஸ்நோடன் ரஷ்யாவில் தற்காலிக தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்குவதா அல்லது மறுப்பதா என்ற முடிவு புடினால் எடுக்கப்பட மாட்டாது என்று அவரது பேச்சாளர் ஒருவர் முன்னர் கூறியிருந்தார்.

ஸ்நோடன் கடந்த மூன்று வாரங்களாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே தங்கியுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்புத் திட்டத்தை அம்பலப்படுத்தியக் குற்றத்திற்காக அவரை தம்மிடம் ஒப்படைத்துவிடும்படி அமெரிக்கா ரஷ்யாவைக் கேட்டுவருகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யா வர இருக்கின்ற நிலையில், ஸ்நோடன் விவகாரம் ரஷ்ய அதிபருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். -BBC