துபாய்: உடல் பருமனை குறைப்பதை ஊக்குவிப்பதற்காக, துபாயில், 1 கிலோ உடல் எடையை குறைப்பவர்களுக்கு, 1 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போதிய உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு இல்லாததால், உடல் பருமன் அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
துபாய் அரசு, அங்குள்ள நகை கடை உரிமையாளர்களுடன் இணைந்து, உடல் எடையை குறைப்பவர்களுக்கு, தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்தில், குறைந்த பட்சம், 2 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு, குறைந்த பட்சம், 2 கிராம் தங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேருபவர்கள் பதிவு செய்வதற்காக, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரம்ஜானையொட்டி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க வசதியாக, நடைபழகுதல், குதியோட்டம், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள துபாயில், 91 இடங்களை, நகராட்சி ஒதுக்கிஉள்ளது.