இசி: மனுப்பாரங்களை நிராகரிக்கவில்லை, மைகார்ட் பிரதிகள் தேவை

தேர்தல் ஆணையம் (இசி), டிஏபி கூறுவதுபோல் மைகார்ட் பிரதிகள் இணைக்கப்படாமல் சமர்பிக்கப்படும் புதிய வாக்காளர்களின்  விண்ணப்பப் பாரங்களை நிராகரிக்கவில்லை என்று அதன் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறுகிறார்.

அரசியல் கட்சிகள் விண்ணப்பத்தாரர்களின் மனுப்பாரங்களை அனுப்பிவைக்கும்போது கூடவே அவர்களின் மைகார்ட் ஓளிநகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளில் உள்ள உதவிப் பதிவதிகாரிகள், தகுதி இல்லாதவர்களையும் வாக்காளர்களாக்கும் முயற்சிகளில் இறங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

“நாங்கள் ஒட்டுமொத்தமாக (விண்ணப்பங்களை) நிராகரிக்கவில்லை. டிசம்பர் இறுதிக்குள் (மைகார்ட் ஒளிநகல்கள்) அனுப்பிவையுங்கள்”, என நேற்று தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு விளக்கக்கூட்டத்துக்குப் பின்னர் அப்துல் அசீஸ் கூறினார்.

சீபூத்தே எம்பி திரேசா கொக், மைகார்ட் ஒளிநகல்கள் இணைக்கப்படாத 500-க்கு மேற்பட்ட புதிய வாக்காளர் விண்ணப்பப் பாரங்களைக் கூட்டரசு பிரதேச இசி ஏற்கமறுத்துவிட்டதாக இவ்வாரத் தொடக்கத்தில் குறைகூறியிருந்தார்.

இசி-இன் இந்தப் புதிய விதிமுறை பற்றித் தங்களுக்குத்  தெரிவிக்கப்படவில்லை என்று கொக் கூறினார். 

சிலாங்கூர் இசியும் இதைத்தான் செய்தது என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி, டோனி புவாவும் தெரிவித்தார். சமயம் பற்றிய தகவல்கள் சரிவர இடம்பெறாததைக் காரணம்காட்டி அது  விண்ணப்பப்பாரங்களை நிராகரித்ததாக அவர் சாடினார்.

அசீஸ் அதை மறுத்து புவா பொய்யுரைப்பதாகக் கூறினார்..

“அது பொய். புதிய வாக்காளர்களாக பதிவுசெய்ய சமயத்தைக் குறிப்பிட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை அல்ல”, என்றாரவர்.

உதவிப் பதிவதிகாரிகள் தகுதியற்றவர்களின் பெயர்களையெல்லாம் சமர்பித்து பல பிரச்னைகளை உண்டுபண்ணிவிடுகிறார்கள் என்பதால் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள முனையும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் இசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றவர் விளக்கினார்.

இவ்வாண்டு ஜூலைக்கும் செப்டம்பருக்குமிடையில் சிலாங்கூரில் 36,199 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில் 16,803 தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

94 உதவிப் பதிவதிகாரிகள் தகுதியற்றவர்கள் என்று நீக்கப்பட்டதாகவும் மேலும் 163 பேருக்குக் “கடும் எச்சரிக்கை” விடுக்கப்பட்டதாகவும் அசீஸ் கூறினார். இந்த உதவிப் பதிவதிகாரிகள் எந்தெந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் வெளியிடவில்லை.

இப்போது நாட்டில் 11,483 உதவிப் பதிவதிகாரிகள் உள்ளனர்.

TAGS: