பிரிட்டனின் மிகப்பெரிய மருந்துக் கம்பனியான கிளாக்ஸோஸ்மித்கிளைன் GlaxoSmithKline அதன் சட்டநிபுணர்களையும் கணக்காய்வாளர்களையும் சீனாவுக்கு அனுப்புகிறது.
இந்த நிறுவனம் மீது சீன அதிகாரிகள் லஞ்ச ஊழல் விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையிலேயே இவர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள்.
மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் சுமார் 490 மில்லியன் டாலர்கள் பணத்தை பயண ஏற்பாட்டு ஏஜண்டுகளுக்கும் ஆலோசனை மையங்களுக்கும் மாற்றியுள்ளதாக சீன காவல்துறையினர் கடந்த திங்களன்று குற்றஞ்சாட்டினர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அந்த மருந்துக் கம்பனி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளது.
கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் சீனாவிலுள்ள நிதி-நிர்வாக இயக்குநர் நாட்டை விட்டுவெளியேற விடாமல் தடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அந்த நிறுவனம் உறுதிசெய்தது. -BBC