பெல்ஜியத்தின் அரசராக கடந்த இருபது ஆண்டுகளாக இருந்துவருகின்ற மன்னர் ஆல்பர்ட் தனது மகனுக்கு வழிவிட்டு அரியணையிலிருந்து கீழிறங்கியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸின் அரண்மனையில் நடந்த உணர்வுபூர்வமான வைபவத்தில் பொறுப்பை பட்டத்து இளவரசன் ஃபிலிப்பிடம் ஒப்படைத்த 79 வயது மன்னர், தனது ஆட்சிக் காலம் நெடுக்கவும் தனக்கு உறுதுணையாக நின்ற ராணி பவோலாவுக்கு நன்றி தெரிவித்தார்.
மன்னராகும் தனது மூத்த மகன் ஃபிலிப்பை அவர் புகழ்ந்தார்.
பெல்ஜியத்தை ஆளுகின்ற சரியான தகுதிகள் படைத்தவர் ஃபிலிப்பென்று அவர் குறிப்பிட்டார்.
பிரஞ்சு, ஜெர்மன், ஃப்ளெமிஷ் ஆகிய மொழிகளில் மன்னர் உரையாற்றினார்.
நாட்டின் பிரதமர் எலியோ டி ரூபோவின் முன்னியிலையில் மன்னர் பொறுப்பை துறக்கும் ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டார்.
நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு ஃபிலிப் புதிய மன்னராக முடிசூடியுள்ளார். -BBC