திங்கள் கிழமை பிறந்த பிரிட்டனின் முடிக்குரிய புதிய வாரிசுடன், கேம்ப்பிரிட்ஜ் சீமாட்டியும் அவரது கணவர் இளவரசர் வில்லியமும் தமது அரண்மனைக்குத் திரும்பியுள்ளனர்.
கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி குழந்தையை கையில் ஏந்தியபடி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அவரது கணவர் இளவரசர் வில்லியம் அருகேயிருந்தார். பிறகு அவர் குழந்தையை வாங்கிக் கொண்டு செய்தியாளர்களிம் பேசினார்.
தனது மகன் சற்றே பெரியவனாக குண்டாக இருப்பதாகத் தெரிவித்த இளவரசர் வில்லியம், குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்யவில்லை என்றார். இது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம், எந்த ஒரு பெற்றோராலும் இதைப் புரிந்து கொள்ள முடியும் என்று கேட் தெரிவித்தார்.
குழந்தை அதன் தாயைப் போல இருப்பதாக வில்லியம் கூறினார். ஆனால் அதை கேட் மறுத்துள்ளார். தாயும் சேயும் மருத்துவமனையில் இருந்து வெளியேவந்தபோது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தை துணியால் சுற்றப்பட்டிருந்தது. கைகளை சற்றே வெளியில் நீட்டியது. இருந்தும் முகம் முழுவதுமாகத் தெரியவில்லை.
ஊடகவியலாளர்களிடம் மகிழ்வுடன், பதட்டமில்லாமல் இருவரும் பேசினர். “நீங்கள் மருத்துவமனைக்கு முன்பு நீண்டநேரம் காத்திருந்தீர்கள். இனி நீங்கள் உங்கள் வழமையான பணிக்குத் திரும்புங்கள். நாங்கள் வீட்டுக்குப் போய் இந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறோம்”, என்று கூறி நிருபர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார் வில்லியம். -BBC